வாட்ஸ்அப் பயனாளர்கள் சமீபகாலமாக பிங்க் வாட்ஸ் அப் என்ற பெயரில் வரும் லிங்குகளைத் திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள். பிங்க் வாட்ஸ்அப்பா… அப்படின்னா என்ன என்று கேட்கிறீர்களா…
பிங்க் வாட்ஸ்அப்
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் இந்த வாட்ஸ்அப் அவ்வப்போது போலி செய்திகளைப் பரப்பும் தளமாகிவிடுவதுண்டு. அந்தவகையில், போலி செய்திகள், பொய்யான தகவல்கள் பரப்படுவதைத் தடுக்க வாட்ஸ் அப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க வாட்ஸ் அப் பெயரிலேயே வைரஸ் பரப்பவும், மோசடி செய்யவும் ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. பல்வேறு புதிய வசதிகளை அப்டேட் வடிவில் வழங்கிவரும் வாட்ஸ் அப்பின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருக்கும். அந்தவகையில், வாட்ஸ் அப் பிங்க் நிறத்தில் புதிய அப்டேட் வெளியிட்டிருப்பதாக ஒரு மெசேஜ் சமீபகாலமாக சுற்றி வருகிறது.
பின்னணி என்ன?
பிங்க் வாட்ஸ் அப் என்ற பெயரில் பகிரப்படும் இணைப்பில் APK வடிவிலான ஒரு ஆப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், இது வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ அப்டேட் கிடையாது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்வதே ஸ்மார்ட்போனுக்குப் பாதுகாப்பானது. இதுபோன்ற ஏபிகே ஃபார்மேட்டில் கிடைக்கும் செயலிகள் மூலம் எளிதாக மோசடியில் ஈடுபட முடியும். இந்தவகை ஆப்கள் மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் வங்கி பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களைத் திருடி, மோசடியில் ஈடுபட முடியும் என்று எச்சரிக்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள்.
அதேபோல், அந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்தால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும், உங்கள் வாட்ஸ் அப் கணக்கையே இழக்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கை மணியடிக்கிறார்கள். ஸ்மார்ட்போனில் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யும் முன்னர் அது பாதுகாப்பானதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்தபின்னர் அடுத்தகட்டத்துக்கு செல்வது பாதுகாப்பானது. பிங்க் வாட்ஸ் அப் அப்டேட் என்ற பெயரில் வாட்ஸ் அப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.