கொரோனா வைரஸ் உருவானது தொடர்பான சர்ச்சைகள் இதுவரை முடிந்த பாடில்லை. இதுதொடர்பான ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா இடையே இதுதொடர்பான கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து கூறியுள்ள கருத்து சீன ஊடகங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சீன ஊடகமான குளோபல் டைம்ஸின் எடிட்டர் ஹூ ஜிஜின், வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாகக் கூறப்படும் பழைய மற்றும் ஆதாரமற்ற கதைகளை டாக்டர் அந்தோனி ஃபாசி மிகைப்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். “கொரோனா வைரஸ் தொற்றை புரிந்து கொள்வதிலும் வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் அதிக கவனத்தை செலுத்துவதிலும் அமெரிக்க வல்லுநர்கள் சீன வல்லுநர்களைவிட பலவீனமானவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வல்லுநர்கள் குழு ஒன்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக வுகானுக்கு சென்றது. அங்கு வைரஸானது மக்கள் மத்தியில் பரவக்கூடிய இரண்டு விஷயங்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து `யுனைடெட் ஃபேக்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா : எ ஃபெஸ்டிவல் ஆஃப் ஃபேக்ட் செக்கிங்’ என்ற தலைப்பில் நடந்த விர்ச்சுவல் நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் இயற்கையாகவே வளர்ந்தது என்பதை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா என்று ஃபாசியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அந்தோனி ஃபாசி, “எனக்கு இந்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லை. சீனாவில் என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் விலங்கிடம் இருந்து தோன்றியிருக்கலாம் அல்லது வேறு எதாவதிலிருந்து தோன்றியிருக்கலாம். ஆனால், அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் எந்தவொரு விசாரணைக்கும் ஆதரவாக நான் இருக்கிறேன்” என்றார். ஃபாசியின் இந்தக் கருத்து சீன ஊடகங்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் சேவியர் பெஸேரா உலக சுகாதார அமைப்பின் 74-வது பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “சயின்ஸ் அடிப்படையிலான தகவல்களுடன் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட வெளிப்படையான ஆய்வு தொடங்கப்பட வேண்டும். வைரஸ் தொடர்பான ஆரம்ப நாள்களை முழுமையாக மதிப்பிடுவதற்கு சர்வதேச நிபுணர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்க வல்லுநர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி 2019-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதிக்கு முன்பு எந்தத் தொற்றையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அந்த ஆய்வகத்தின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இதுவரை யாரும் பாதிப்படையவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
“ஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியேறியுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருவதன் உண்மையான நோக்கம் என்ன? உண்மையில் வைரஸ் எங்கிருந்து தோண்றியது என்பதை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அக்கறை செலுத்துகிறதா அல்லது கவனத்தை திசை திருப்புகிறதா?” என்றும் ஜாவோ செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Also Read : `உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு!’ – யார் சாமி இவங்க?