உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸின் ஈஃபிள் டவரின் உயரம் சுமார் 20 அடி (6 மீ) அளவுக்குக் கூடியிருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் இதன் பின்னணியில் என்ன இருக்கிறது?
ஈஃபிள் டவர்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவர், அதன் தனித்துவமான டிசைனாலும் உயரத்தாலும் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகிறது. 19-ம் நூற்றாண்டில் Gustave Eiffel என்ற பொறியாளரால் கட்டப்பட்டபோது, வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை விட பெரியதாக வடிமைக்கப்பட்டது. இதன்மூலம் மனிதர்களால் கட்டப்பட்ட உயரமான கட்டுமானம் என்ற பெயர் பெற்றது. இந்தப் பெருமையை அந்த டவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை தக்க வைத்திருந்தது. 1929-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டப்பட்ட Chrysler Building அந்த சாதனையை முறியடித்தது. உலக அளவில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது ஈஃபிள் டவர்.
உயரத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு காரணங்களால், அது மாறியே வந்திருக்கிறது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிராட்கேஸ்டிங் எனப்படும் ஒளிபரப்பு சேவைகளுக்கான பயன்பாட்டில் இந்த டவர் இருந்து வருகிறது. டவரின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்டெனாக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படும். இதனால், அதன் உயரமும் அப்போது மாறுபடும்.
அந்தவகையில், பாரீஸில் இருக்கும் அந்த டவரின் உச்சியில் புதிதாக ஒளிபரப்பு சேவைகளுக்கான ஒரு ஆன்டெனா தற்போது பொருத்தப்பட்டிருக்கிறது. இது நேரலையாக பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் DAB+ ஆன்டெனா எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் டவரின் உயரம் 20 அடி (6 மீ) அளவுக்கு அதிகரித்து, மொத்த உயரம் 330 மீட்டராக இருக்கிறது.
Also Read – Road Trip பிளான் பண்றீங்களா… அதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!