ஃபேஸ்புக் பயனாளர்கள் 533 மில்லியன் பேரின் தனிப்பட்ட தகவல்கள் லீக்கான விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக், பயனாளர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை உரிய முறையில் பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அப்படி ஒரு பெரிய சர்ச்சையில் அந்த நிறுவனம் சிக்கியிருக்கிறது.
533 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்கள் லீக்கானதாக புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. தகவல்கள் கசிந்ததை ஒப்புக்கொண்டிருக்கும் ஃபேஸ்புக், இது முன்னரே நடந்த விஷயம், தற்போது புதிதாக நடந்ததல்ல என சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் 533 மில்லியன் பயனாளர்கள் தகவல்கள் லீக்கானபோது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கின் தகவல்களும் லீக்காகியிருக்கிறது என்ற உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. சைபர் பாதுகாப்பு நிபுணரான டேவ் வாக்கர் என்பவர், மார்க் ஜக்கர்பெர்க் சிக்னல் ஆப்பைப் பயன்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப், புதிய பிரைவசி கொள்கைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த முடியாது என கடந்த பிப்ரவரியில் ஒரு அப்டேட் வெளியானது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை மட்டும் 2020 மே 15-ம் தேதி வரை ஒத்திவைத்தது வாட்ஸ் அப். மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பின் இந்த புதிய அறிவிப்பு மாற்று தளங்களைத் தேடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. அந்த சூழலில் பயனாளர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிக்னல் ஆப்பை நோக்கி நெட்டிசன்களின் கவனத்தைத் திருப்பியது.
இந்தசூழலில்தான், தனது பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜக்கர்பெர்க் சிக்னல் ஆப் பயன்படுத்துவதாக டேவ் வாக்கர் கூறியிருக்கிறார். எண்டு டு எண்டு என்க்ரிப்ஷன் கொண்ட சிக்னல், பயனாளர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்களால் பாரட்டப்படுகிறது. இதுகுறித்து விளையாட்டாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிக்னல் ஆப், `வாட்ஸ் அப்பின் பிரைவசி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய கால அவகாசமான மே 15 நெருங்குவதை ஒட்டி மார்க் ஜக்கர்பெர்க் ஒரு முன்னுதாரணமாகியிருக்கிறார்’ என்று கமெண்டடித்திருக்கிறார்கள்.