1987ம் ஆண்டு முதல் 2020 வரை பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் Time Lapse என்ற புதிய வசதியை கூகுள் எர்த் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் பெற வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கூகுள் எர்த் என்ற வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பூமி குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதன்மூலம் பயனடைந்தனர். கடந்த 15 வருடங்களாக கோடிக்கணக்கானோர் கூகுள் எர்த்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் ஆகும் வகையிலான பூமியின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு கூகுள் எர்த் செயல்பட்டு வருகிறது.
Time Lapse
காலநிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றம் என்ற பிரச்னை உலக அளவில் பெரிதாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், அதற்கான நேரடி சாட்சியமாக டைம் லேப்ஸ் என்ற கூகுள் எர்த்தின் இந்த அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1984-ம் ஆண்டு முதல் 2020 வரையில் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இதன்மூலம் பயனாளர்கள் அறிந்துகொள்ளலாம்.
பூமியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறது கூகுள். இதன்மூலம் பருவநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
டைம் லேப்ஸ் வசதி என்பது, பூமியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கான 2.4 கோடி செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒண்றினைந்து உருவாக்கப்பட்ட ஒரு அம்சம். ஏறக்குறைய 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொருவரும் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். இதுதவிர, உலகின் குறிப்பிட்ட இடங்கள் 1984-2020 இடைப்பட்ட காலத்தில் என்ன மாற்றமடைந்திருக்கிறது என்பது குறித்த ஷார்ட் வீடியோக்களையும் கூகுள் எர்த் வெளியிட்டிருக்கிறது.
அதில், நம்மூர் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பற்றிய வீடியோவும் அடக்கம். இந்தியாவில் இருக்கும் அசாம் காடுகள், உத்தராகாண்டின் தெஹ்ரி அணை உள்ளிட்டவைகள் பற்றிய வீடியோக்களும் இடம்பெற்றிருக்கிறது. பூமியின் மாற்றங்கள் குறித்த டைம் லேப்ஸ் அம்சத்தை ஆண்டுதோறும் அப்டேட் செய்யும் வகையிலான திட்டத்தையும் கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்த மாற்றங்கள் குறித்த விவாதம் வலுப்பெற்று, பூமியின் பிரதான பிரச்னைகள் குறித்த பார்வையும் மாறுபடும் என்று கூகுள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
கூகுள் எர்த்தின் ஷார்ட் வீடியோக்களை – https://developers.google.com/earth-engine/timelapse/videos என்ற இணைப்பில் பார்க்கலாம்.