கிரீன்லாந்து, அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறைகள் பருவநிலை மாறுபாட்டால் உருகத் தொடங்கியிருக்கின்றன. இதனால், பல கடலோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கிரீன்லாந்து
பூமியின் இரண்டாவது மிகப்பெரிய பனிக்கட்டியாக கருதப்படும் கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டி ஒன்று காலநிலை மாற்றம் காரணமாக உருகும் விளிம்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தீவிரமாக எடுத்து தேவையான நடவடிக்கைகளைச் செய்யத் தவறினால் முழு பனிக்கட்டியும் உருகும் என்றும் இதனால் கடல் மட்டம் சுமார் 7 மீட்டர் உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள்.
கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் நார்வே ஆக்டிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி மத்திய மேற்கு கிரீன்லாந்தில் அமைந்துள்ள ஜாகோப்ஷவன் படுகையானது ஐந்து மிகப்பெரிய படுகைகளில் ஒன்றாகும். 1880-களில் இருந்து கடலில் ஏற்படும் நீரின் உயர மாற்றங்கள், வெப்பநிலை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு டேட்டாக்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் பனிக்கட்டியானது வெப்பநிலையால் வழக்கத்தைவிட அதிகமாக உருகுவதாகக் கண்டறிந்துள்ளனர். இவை தொடர்ச்சியாக நிகழும் சுழற்சியால் ஏற்படுவதுதான் என்றும் அவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்களில் முதன்மையானவரான டாக்டர் நிக்லாஸ் போயர்ஸ், “நாங்கள் மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டி நகர்வதைக் காண்கிறோம். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நேரத்தில் எங்களால் எதையும் சொல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வாளர்கள், இந்த நகர்வு பனிக்கட்டி உருகுவது நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் உருகுநிலை மிகவும் மோசமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து பனிக்கட்டியின் மற்ற பகுதிகளையும் மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகா
அண்டார்டிகா, பனிப்பாறைகளால் முழுவதும் உறைந்த கண்டம். இதன் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து மிகப்பெரிய அளவுள்ள பனிக்கட்டி ஒன்று உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பாறை சுமார் 4,320 சதுர கி.மீ அளவு கொண்டது. அதாவது சுமார் 170 கி.மீ நீளமும், 25 கி.மீ அகலமும் உடையது என தெரிவித்துள்ளனர். இந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகினால் பல கடலோர கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் கார்பன் அதிகளவில் வெளியேறுதல் மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதாகவும் இதனால், உலக அளவில் கடல் மட்டத்தின் அளவு கடுமையாக அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read : கலிஃபோர்னியாவில் ஒரு பூவைக் காண வரிசையில் நின்ற கூட்டம்! – அப்படி என்ன ஸ்பெஷல்?