2021 ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே சந்திக்க இருக்கும் சவால்கள் என்னென்ன… வெற்றி வாய்ப்பு எப்படி… பலம், பலவீனம் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 2020 ஐபிஎல் தொடரை சி.எஸ்.கே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி ஐபிஎல் 13வது சீசனைத் தொடங்கிய சி.எஸ்.கே, அந்த சீசன் முடியும்போது 7வது இடத்தில் இருந்தது. இதுவரை பங்கேற்ற ஐபிஎல் சீசன்களில் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியாமல் வெளியேற நேர்ந்தது. ஸ்லோ பேட்டிங், ஸ்பின்னர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம், தோனியின் கேப்டன்ஷிப் என எல்லாமே விமர்சனத்துக்குள்ளானது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பிறகு இரண்டாவது சக்ஸஸ்புல் அணியாக வலம் வரும் சி.எஸ்.கே, 2021 ஐபிஎல் சீசனை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறதா?
பலம்
தோனியின் அனுபவம் வாய்ந்த கேப்டன்ஷிப் எப்போதும் சி.எஸ்.கேவின் பலமாக இருந்திருக்கிறது. 2020 சீசன் என்பது தோனியின் கரியரில் எப்போதாவது ஏற்படும் மிஸ் கால்குலேஷன்களில் ஒன்றுதான் என்று மார்தட்டுகிறார்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். கடந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறிய சுரேஷ் ரெய்னாவின் வருகை சி.எஸ்.கே பேட்டிங் யூனிட்டுக்கு நிச்சயம் மைலேஜ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோல், தோனி, டூப்ளெசிஸ், அம்பதி ராயுடு, ஜடேஜா, சாம் கரண் மற்றும் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பா, மொயின் அலி, இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் என பேட்டிங் யூனிட் வலுவாகவே இருக்கிறது. அதேபோல், பிராவோ, ஸ்ரதுல் தாக்கூரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களே. சர்ப்ரைஸாக புஜாராவையும் சி.எஸ்.கே இந்த முறை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
டி20 கிரிக்கெட் என்பது எப்போதும் குளோஸ் என்கவுண்டர்கள் எனப்படும் கடைசி நேர டிவிஸ்ட் நிறைந்தது. அதுவும் ஐபிஎல் தொடரென்பது இதுபோன்ற கிளைமேக்ஸ் ஃபைட்டுகளால் நிரம்பியது. அனுபவம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே இந்தக் களத்தில் சண்டை செய்ய முடியும். அத்தகைய அனுபவம் வாய்ந்த வீரர்களைப் பொறுத்தவரை சி.எஸ்.கே மற்ற அணிகளை முந்தி நிற்கிறது.
பலவீனம்
அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதைத் தான் மறுபுறம் பலவீனமாகவும் சொல்ல வேண்டி இருக்கிறது. தோனி நாற்பதை நெருங்குகிறார். அணியின் மூத்த வீரர் இம்ரான் தாஹீர். கடைக்குட்டி சாம் கரண் (22).
சி.எஸ்.கே வீரர்களில் தோனி, ரெய்னா, அம்பாதி ராயுடு உள்பட பலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். போன ஐபிஎல்லுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் களம் காண இருக்கிறார்கள். அதேபோல், ஜடேஜாவும் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரும் சுமார் 3 மாதங்களாக காம்படீடிவ் கிரிக்கெட் ஆடவில்லை. பிராவோவும் காயத்தால் ஒரு இடைவெளி எடுத்திருந்தார். இது சி.எஸ்.கேவின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னர்கள்
இதுவரை ஸ்பின்னர்களைத் துருப்புச் சீட்டாக வைத்தே சி.எஸ்.கேவின் கேம் பிளான் இருந்திருக்கிறது. இந்த முறை எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சி.எஸ்.கே மும்பை வான்கடேவின் ஐந்து போட்டிகளில் விளையாடுகிறது. அது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். கடைசி நேரத்தில் ஹஸல்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இப்போது மிச்சமிருப்பது தென்னாப்பிரிக்காவின் லுங்கி இங்கிடி மட்டுமே.
தீபக் சஹார், ஸ்ரதுல் தாக்குர் மற்றும் பிராவோ போன்றவர்களால் சீம் செய்ய முடியுமே தவிர, அவர்கள் வேகமாக பந்துவீசுபவர்கள் கிடையாது. ஆக, இதற்கேற்க கேம் பிளானையும் திட்டமிட வேண்டிய சூழலில் இருக்கிறது சி.எஸ்.கே. ஹஸல்வுட்டுக்குப் பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை ரீப்ளேஸ்மெண்டாக எடுக்க வேண்டும். மாறாக அஜாக்கிரதையாக இருக்கும்பட்சத்தில், அதுவும் சி.எஸ்.கேவுக்குப் பின்னடைவாக அமையும். சி.எஸ்.கே மும்பைக்கு அடுத்ததாக டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா மைதானங்களில் விளையாடுகிறது. அந்தந்த பிட்சுகளின் தன்மைக்கேற்ப பிளேயிங் லெவன் தேர்வு இந்த சீசனில் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படும்.
வாய்ப்புகள்
ஒவ்வொரு முறை ஏகப்பட்ட விமர்சனங்களையும் எதிர்க்கொண்டே தோனியின் படை சாதித்து வந்திருக்கிறது. இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர், இனிமேல் சி.எஸ்.கேவின் பாட்ஷா ஐபிஎல்லில் பலிக்காது என்பதே பெரும்பாலான விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி சாம்பியானாக பழைய பன்னீர்செல்வமாக 2018 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்திருந்தது சி.எஸ்.கே.
ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே இதுவரை பங்கேற்றிருக்கும் 11 சீசன்களில் 2020 சீசனைத் தவிர 10 முறை பிளே ஆஃபுக்குத் தகுதிபெற்றிருக்கிறது. இது வேறெந்த அணியும் செய்யாத சாதனை. அதேபோல், எட்டு முறை இறுதிப் போட்டி, 3 முறை சாம்பியன் – இது சி.எஸ்.கேவின் டிராக் ரெக்கார்டு. அந்தவகையில், இந்த முறை தோனி தலைமையில் சி.எஸ்.கே எழுச்சிபெறும் என்று நம்புகிறார்கள் அந்த அணியின் ரசிகர்கள்.
`ஒவ்வொரு முறையும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி. அவர்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்னவென்று மற்ற அணிகள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது. மூன்றுமுறை கோப்பை, ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி என முக்கியமான அணியாக சி.எஸ்.கே இருக்கிறது’ – 2018 சி.எஸ்.கேவின் கம்பேக் வெற்றிக்குப் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே சொன்னது இது. அப்படி ஒரு கம்பேக்கைத்தான் 2021 சீசனில் சி.எஸ்.கேவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.