சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்த நிலையில், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து டெல்லி அணி இலக்கை எட்டியது.
-
1 ரோஹித் ஷர்மா
மும்பை அணி, 3வது ஓவரிலேயே டிகாக் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்த கேப்டன் ரோஹித் ஷர்மா, மும்பை அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பவர்பிளே முடிவில் மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஏழாவது ஓவரில் சூர்யகுமார் யாதவ், 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா, 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.
-
2 மும்பையைச் சுருட்டிய அமித் மிஸ்ரா
ஐபிஎல் 2021-ல் முதல்முறையாக டெல்லியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அமித் மிஸ்ரா, தனது தேர்வை நியாயப்படுத்தினார். பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய அமித் மிஸ்ரா, அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். அதிலிருந்து கம்பேக் கொடுத்து, தனது இரண்டாவது ஓவரில் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்கினார். அதன்பின்னர், ஹர்திக் பாண்டியா, கிரண் பொல்லார்ட் என மும்பை அணியின் மிடில் ஆர்டரை அமித் மிஸ்ரா சிதைத்தார். ஒரு கட்டத்தில் 76-2 என்றிருந்த மும்பையின் ஸ்கோர், 84-6 என்ற பரிதாப நிலைக்குச் சென்றது. தனது கடைசி ஓவரில் இஷான் கிஷனையும் வீழ்த்தினார் அமித் மிஸ்ரா. நான்கு ஓவர்கள் பந்துவீசிய அமித் மிஸ்ரா, 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பை அணிக்கெதிராக டெல்லி பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு இதுவே.
-
3 இஷான் கிஷான் - ஜெயந்த் யாதவ்
12 ஓவர்கள் முடிவில் 84-6 என்ற நிலையில் 7வது விக்கெட்டுக்குக் கைகோர்த்த இஷான் கிஷான் - ஜெயந்த் யாதவ் ஜோடி மெதுவாக ரன் சேர்க்கத் தொடங்கியது. 34 பந்துகள் தாக்குப்பிடித்த இந்த இணை, 39 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷான் 26 ரன்களும், ஜெயந்த் யாதவ் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
-
4 தவான் - ஸ்மித்
138 ரன்கள் என்ற எளிதான டார்கெட்டோடு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ஜெயந்த் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் 9 போட்டிகளில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் பிரித்வி ஷா. இதையடுத்து கைகோர்த்த தவான் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி டெல்லி அணி ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மித் 33 ரன்களோடு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லலித் யாதவோடு இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், 42 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
-
5 டெல்லியின் 11 ஆண்டு காத்திருப்பு
கடைசி 5 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில், லலித் யாதவோடு சேர்ந்து ஹெட்மெயர் டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். லலித் யாதவ் 22 ரன்களுடனும், ஹெட்மெயர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை நிர்ணயித்த டார்கெட்டை 19.1 ஓவர்களில் எட்டிய டெல்லி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், மும்பைக்கு எதிராக 6 போட்டிகளுக்குப் பின்வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி. அதேபோல், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி அணி முதல்முறையாக வென்றிருக்கிறது.
0 Comments