உலகில் இன்றைக்கு விண்வெளி நிறுவனங்களுக்கு மத்தியிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. விண்வெளிக்குப் பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் பல நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் தற்போது போட்டியில் உள்ளனர். இதில் ஏற்கெனவே, பிரிட்டனைச் சேந்த ரிச்சர்ட் பிரான்சன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். இதனால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் புதிய அத்தியாயத்தை ரிச்சர்ட் தொடங்கி வைத்துள்ளார் என்றே கூறலாம். அந்த வகையில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் உள்ள பாலைவனத்தில் இருந்து அமெரிக்க நேரப்படி ஜூலை 20-ம் தேதி மாலை 6:30 மணியளவில் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு செல்ல உள்ளார். ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் தி நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டின் மூலம்தான் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு செல்கிறார். இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டானது ஆட்டோமெட்டிக்காக இயங்கக் கூடியது. இந்த ராக்கெட்டில் கூம்பு வடிவில் இருக்கும் முன் பகுதியில்தான் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது குழுவினர் இருப்பார்கள். இவர்கள் அந்த ராக்கெட்டில் எதையும் இயக்கத் தேவையில்லை. பைலட்கள் இல்லாமல் ராக்கெட் இயங்குவது இதுவே முதல்முறை. தானாகவே விண்வெளிக்குச் சென்று தானாகவே பூமிக்குத் திரும்பும் வகையில் இந்த ராக்கெட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது. பூவியில் இருந்து சுமார் 100 கி.மீ தூரம் வரை இந்த ராக்கெட் செல்லும் திறன் உடையது. மொத்தமாக இந்த ராக்கெட் மேலே சென்று மீண்டும் கீழே வர பத்து நிமிடங்கள்தான் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளி பயணத்தில் ஜெஃப் பெசோஸ் உடன் இணைந்து 82 வயதான முன்னாள் பெண் விமானியான வாலி ஃபங்க் என்பவரும் செல்ல உள்ளார். விண்வெளிக்கு செல்லும் அதிக வயதான நபர் இவர்தான். இவர் ஏற்கெனவே மெர்குரி 13 விண்கலத்தின் வழியாக விண்வெளிக்கும் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் மற்றும் 18 வயதான ஆலிவர் டேமென் ஆகியோரும் இந்த ராக்கெட்டில் பயணிக்க உள்ளனர். மிகவும் இளம் வயதில் இருவர், நடுத்தர வயதில் ஒருவர், வயதான நபர்களில் ஒருவர் மற்றும் ஜெஃப் பெசோஸ் என விண்வெளிக்கு செல்லும் இந்த குழுவே மிகவும் வித்தியாசமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெற்றிகரமாக விண்ணுக்குச் சுற்றுலா சென்று திரும்பினால் விண்ணுக்குச் சுற்றுலா சென்ற வெற்றிகரமான இரண்டாவது குழு என்ற பெயரைப் பெறுவார்கள்.
டச் இளைஞரான ஆலிவர்தான் உலகிலேயே விண்வெளிக்கு செல்லும் மிகவும் இளம் வயது நபர். இந்த இளைஞருக்கு பதிலாக பணக்காரர் ஒருவர்தான் பயணிக்க வேண்டியதாம். இதற்காக அவர் 28 மில்லியன் டாலரை செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு வேலைகள் இருப்பதால் அவருக்கு பதிலாக இந்த இளைஞர் செல்கிறார். இப்படி பலவிதமான விஷயங்கள் சேர்ந்து ப்ளூ ஆர்ஜினின் விண்வெளி பயணத்துக்காக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த விண்வெளி பயணத்தில் பல ரிஸ்க்குகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read : Pegasus: ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், 2 அமைச்சர்கள்… விஸ்வரூபம் எடுக்கும் பெகாஸஸ்… பின்னணி!