மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் அத்துமீறியதாக வெளியான வீடியோவை அடுத்து பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக வழக்கறிஞர் கே.டி.ராகவன் அறிவித்திருக்கிறார். என்ன நடந்தது?
மதன் வெளியிட்ட வீடியோ
ஊடகங்களில் பணியாற்றி வந்த மதன் ரவிச்சந்திரன் கடந்த ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க-வில் இணைந்தார். இவர், மதன் டைரீஸ் என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். பா.ஜ.க நிர்வாகிகள் பலர் நிர்வாகிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும் அதுதொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக மதன் தெரிவித்திருந்தார். இதுபற்றிய பேசிய மதன், ‘பா.ஜ.க-வில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்துமீறி நடக்கின்றனர். பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சென்னையில் சில இடங்களையும் வைத்திருக்கின்றனர். 15 தலைவர்கள் பற்றிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பா.ஜ.க மாநிலப் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராகவன் ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்’ என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், அவர் வீடியோ காலில் ஒரு பெண் நிர்வாகியிடம் பேசிக்கொண்டே அச்சில் ஏற்ற முடியாத தவறான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே இந்த வீடியோ வெளியிடப்படுவதாக மதன் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.
கே.டி.ராகவன் ராஜினாமா
இந்தநிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் அவர், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் …என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது …
இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்… நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்..குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்…சட்ட படி சந்திப்பேன்.. தர்மம் வெல்லும்..’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
Also Read : குத்தகைக்கு விடப்படும் தமிழகத்தின் 6 விமான நிலையங்கள்… என்ன காரணம்?