மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸே எனும் 25 வயதுப் பெண் ஐந்து பெண், 4 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார்.
ஆப்ரிக்கா நாடான மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸே. அவர் கருவுற்றபோது எடுக்கப்பட்ட ஸ்கேனில் 7 குழந்தைகள் கருவில் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால், தாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவிக்கவே, அரசே ஹலிமாவுக்கு உதவ முன்வந்திருக்கிறது. மாலி தலைநகர் பமாகோவிலுள்ள மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் தங்கி சிகிச்சைபெற்ற அவர், கடந்த மார்ச் 30-ம் தேதி மொராக்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 25 வார கர்ப்பிணியாக இருந்த அவர், 30 வாரங்களில் 9 குழந்தைகளைப் பிரசவித்திருக்கிறார். மருத்துவ உலகில் மிகவும் அரிதாக 9 குழந்தைகளை ஹலிமா ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார். ஹலிமாவும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மாலி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய மாலி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபாண்டா சிபி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹாலிமாவின் பிரசவத்தின்போது 10 மருத்துவர்கள் மற்றும் 25 மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழு சிசேரியன் செய்திருக்கிறது. பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடையுடன் உள்ளது. இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இங்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்படும் என ஹாலிமாவுக்கு சிகிச்சை அளித்த மொராக்கோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்த நிகழ்வுகள் இருமுறை நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் 1971-ஆம் ஆண்டிலும் மலேசியாவில் 1999-ஆம் ஆண்டிலும் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால், அந்த பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு மேல் உயிருடன் இல்லை. அமெரிக்காவில் கடந்த 2009-ல் ஒரு பெண் 8 குழந்தைகளை பெற்றெடுத்ததுதான் இதுவரை கின்னஸ் உலக சாதனையாக உள்ளது. அந்தக் குழந்தைகளுக்குத் தற்போது 12 வயதாகிறது.
சிஸியின் கணவர் அட்ஜுடன்ட் காதர் அர்பி, மூத்த மகளுடன் தற்போது மாலியில் இருக்கிறார். இதுகுறித்து பேசிய அர்பி, “மாலியில் இருந்தாலும் அடிக்கடி ஹலிமாவைத் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறேன். குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை.
கடவுள் எங்களுக்கு இந்தக் குழந்தைகளை அளித்துள்ளார் அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. கடவுள் ஏதாவது செய்தால், அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும்’’ என நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?
பொதுவாகக் குழந்தை பேறுக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிகிச்சைகளே இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கக் காரணம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இதேபோல், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பது இயற்கையாக சாத்தியமில்லாத ஒன்று என்று சொல்லும் மருத்துவர்கள், பெண்களின் மாதவிடாய் சுழற்சியின்போது ஒரு முட்டைக்குப் பதிலாக பல்வேறு முட்டைகள் வழக்கத்துக்கு மாறாக வெளிவருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
37 வாரங்களுக்கு முன்பாகப் பிறக்கும் குழந்தைகள் உடல்ரீதியாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ளலாம். முழுமையடையாத நுரையீரல், நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் அந்தக் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
Also Read – சுஷில் குமார் – ஒலிம்பிக் மெடலிஸ்ட் இன்று தேடப்படும் குற்றவாளி… என்ன நடந்தது?