கோவை ட்ரீமேன் யோகநாதனின் பசுமைப் பயணத்தைப் பிரதமர் மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் பாராட்டியிருக்கிறார்.
யார் இந்த யோகநாதன்
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த யோகநாதன் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பேருந்து நடத்துனராகப் பணிபுரிந்து வருகிறார். தனது ஊதியத்தில் 40 சதவிகிதம் வரை மரக்கன்றுகளுக்காகவே செலவிடும் யோகநாதன், பயணிகளுக்கு டிக்கெட்டுடன் மரக்கன்றுகளையும் கொடுத்து மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சிறுவயது முதலே மரங்கள் மீது பேரார்வம் கொண்ட யோகநாதன், இதுவரை 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் 85,000 மரங்களை நட்டிருக்கிறார். இதுதவிர பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இவரது பணியைப் பாராட்டி மத்திய அரசு பசுமைப் போராளி’ என்ற விருதை வழங்கியிருக்கிறது. அதேபோல், தமிழக அரசு இவரை
சுற்றுச்சூழல் செயல்வீரர்’ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. `உயிர்வாழ ஒரு மரம்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளைத் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
ஐவகை மரம் திட்டம்
இயற்கையைப் பேணும் யோகநாதன், சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தென்னை, மா, பலா மற்றும் பழம் தெரும் இரண்டு செடிகளைத் தரும் ஐவகை மரம் வளர்ப்புத் திட்டத்தை இவர் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார். `ஒன்றரை வருடத்தில் அந்த செடிகள் வளர்ந்து, அதன் மூலம் பண பலன் கிட்டத் தொடங்கும். இதனால், மக்களுக்கு மரம் வளர்க்கும் ஆர்வம் அதிகமாகும்’ என்று நம்பிக்கை விதைக்கிறார் யோகநாதன்.
தனது வருமானத்தின் பெரும்பகுதியை மரக்கன்றுகளுக்காகவே செலவிடும் யோகநாதன், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். மனைவி, இரண்டு மகள்கள் என மகிழ்ச்சியான குடும்பம். யோகநாதனின் செயலைப் பாராட்டி அமெரிக்க வாழ் தமிழரான வாசுதேவன் என்பவர் ஆலந்துறையில் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில், மரம் சூழலியல் நடுவம் என்ற அமைப்பை நிறுவி மரக் கன்றுகளைப் பதியம் போட்டு வருகிறார். சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் பதியம் போடுவது குறித்து அங்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார்.
`மரம் நடுவது மட்டுமல்ல, அவற்றை வளர்க்க வேண்டும் என்பதே முக்கியம். அந்தவகையில் இதுவரை நான் நட்ட மரங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. ஐவகை மரம் வளர்க்கும் பொதுநலத் திட்டம் ஒன்றை நான் முன்னெடுத்திருக்கிறேன். இதை அரசு நாடு முழுவதும் கொண்டுசேர்க்க வேண்டும்’ என்கிறார் ட்ரீமேன் யோகநாதன்.