மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது. 222 ரன்கள் டார்க்கெட்டை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் முதல்முறையாக இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்தன.
இந்தப் போட்டியின் 5 முக்கிய திருப்புமுனைத் தருணங்கள்.
-
1 நோ சிங்கிள் சாம்சன்
222 என்ற ஸ்கோரை நோக்கிய ராஜஸ்தானின் சேஸிங்கில் தனியாளாகப் போராடிய சஞ்சு சாம்சன், கேப்டனாகத் தனது முதல் போட்டியிலேயே சதமடித்தார். முதல் ஓவரிலேயே களமிறங்கிய சாம்சன், கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 63 பந்துகளைச் சந்தித்திருந்த சாம்சன், 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ், மனன் வோராவைத் தொடர்ந்து 8வது ஓவரில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் வெற்றிக்கு 75 பந்துகளில் 152 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது 22 பந்துகளில் 29 ரன்களுடன் சாம்சன் மறுமுனையில் நின்றிருந்தார்.
கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் என்று சூழல் மாறியபோது, மறுமுனையில் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நின்றிருந்தபோது சிங்கிள் எடுக்க சாம்சன் மறுத்தது விவாதமானது. சிங்கிளை எடுக்க வேண்டாமென சாம்சன் எடுத்த முடிவு மோரிஸை அதிருப்தியடையச் செய்தது. தோற்றாலும் ரசிகர்களின் மனங்களை வென்ற சஞ்சு சாம்சன் என நெட்டிசன்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். -
2 ஹூடாவின் துவம்சம்
நிகோலஸ் பூரனுக்கு முன்பாகவே புரமோட் செய்யப்பட்டு 4-வது வீரராகக் களமிறக்கப்பட்ட தீபக் ஹூடா, அதற்கு வலு சேர்க்கும் விதமாக ராஜஸ்தான் பந்துவீச்சை நொறுக்கினார். 10-வது ஓவரில் இறங்கிய ஹூடா 28 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சிக்ஸர்கள் மட்டும் 6, பவுண்டரிகள் 4 மட்டும்தான். ராகுலுடனான 105 ரன் பாட்னர்ஷிப்பின் பாதிக்குமேலான ரன்கள் ஹூடா எடுத்தது.
குறிப்பாக 13 மற்றும் 14வது ஓவரில் ராகுல் - ஹூடா இணைந்து தலா மூன்று சிக்ஸர்களைப் பறக்க விட்டனர். ஷிவம் துபே வீசிய 13வது ஓவரில் சிக்ஸர் அடித்தார் ராகுல். அதே ஓவரில் தனது பங்காக இரண்டு சிக்ஸர்களை ஆஃப் சைடிலும், லெக் சைடிலும் பறக்கவிட்டார் ஹூடா. அடுத்த ஓவரை வீசிய ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் 3 சிக்ஸர்களால் மாஸ் காட்டினார் ஹூடா. 20 பந்துகளில் அரை சதமடித்த ஹூடா, ஐபிஎல் அறிமுக வீரர் சகாரியா வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். -
3 ராகுல்
பஞ்சாப் அணி பேட்டிங்கில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ராகுல், 50 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதில், 5 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஓபனிங் இறங்கிய ராகுல், 20வது ஓவரின் இரண்டாவது பந்தில்தான் ஆட்டமிழந்தார். கெய்லேவுடன் 67 ரன்கள், ஹூடாவுடன் 105 ரன்கள் என முக்கியமான இரண்டு பாட்னர்ஷிப்புகளை ராகுல் கட்டமைத்திருந்தார். இதனாலேயே அந்த அணி 221 ரன்களைக் குவிக்க முடிந்தது.
-
4 ஷமி - அர்ஷித் வேகக் கூட்டணி
சஞ்சு சாம்சன் அதிரடியால் ஒரு கட்டத்தில் 222 என்ற டார்க்கெட்டை எட்டுவது `வாய்ப்பில்ல ராஜா’ என்ற நிலையில் இருந்து மாறியது. கடைசி 4 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷமி ஷார்ட் பால்களால் மிரட்டினார். ஷமி வீசிய 16வது ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரிச்சர்ட்சன் வீசிய அடுத்த ஓவரில் 4,6,4 என சாம்சன் மிரட்டினார். ஷமிக்கு 4 ஓவர்கள் முடிந்தநிலையில், 19வது ஓவரை மெரிடித் வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் டீவாட்டியா அவுட் ஆனாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற டார்கெட்டை செட் செய்தார். கடைசி ஓவரை வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப், வைட் யார்க்கர்களால் மிரட்டினார். நான்காவது பந்தை சிக்ஸருக்கு சாம்சன் அனுப்பவே, கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இரண்டில் ஒன்றை சாம்சன் கிரவுண்டுக்கு வெளியே அனுப்பி ராஜஸ்தானை வெற்றிபெற வைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தை டாட் பாலாக வீசிய அர்ஷ்தீப், கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை அவுட்டாக்கினார்.
-
5 அசத்தல் சகாரியா
ராஜஸ்தான் அணிக்காக அறிமுக வீரராகக் களமிறங்கிய சேத்தன் சகாரியா, தனது ஸ்விங் பௌலிங்கால் கவனம் ஈர்த்தார். ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சகாரியாவுக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட இந்த குஜராத் வீரர், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன், ஜை ரிச்சர்ட்சன் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியிலேயே அசத்தியிருக்கிறார் சகாரியா.
Photo Credits - BCCI
0 Comments