2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. 67வது தேசிய விருது நிகழ்வில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில், இதுவரைக்கும் நடந்த தேசிய விருதுகளில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம்.
1954 ஆம் ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு மொழி சினிமாக்களிலும் சிறந்த படத்துக்கான விருது 1955 ஆம் ஆண்டில் இருந்துதான் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இரண்டாம் ஆண்டில் இருந்து 13ஆம் ஆண்டு வரைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு வருடம் ஒரு படத்துக்கு மட்டுமே விருது கொடுப்பதைத் தொடர்ந்து வருகிறார்கள். இதில் 1974,76,78 மற்றும் 1988 ஆகிய நான்கு வருடங்களிலும், இந்தப் பிரிவில் தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவில்லை. அந்த வருடங்கள் சில நல்ல படங்கள் வந்திருந்தாலும் சிறந்த தமிழ்ப் படம் பிரிவில் எந்த விருதும் அந்த ஆண்டுகளில் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு மொழி சினிமாவுக்கும் தனிதனியாக சிறந்த படத்துக்கான விருது கொடுத்தாலும், இந்திய அளவில் சிறந்த படமாக `மறுபக்கம்’,
காஞ்சிவரம்’ என இரண்டு படங்கள் விருது வாங்கியிருக்கின்றன. இந்தப் பிரிவிலும் 1978 ஆம் ஆண்டு இந்திய அளவில் எந்த மொழிப் படமும் சிறந்த படத்திற்கான விருதை வாங்கவில்லை.
இந்திய அளவில் சிறந்த இயக்குநருக்கான விருதை தமிழ் சினிமா நான்கு முறை வென்றிருக்கிறது. காதல் கோட்டை’ படத்துக்காக அகத்தியன்,
ஊருக்கு நூறுபேர்’ படத்துக்காக பி.லெனின், `நான் கடவுள்’ படத்திற்காக பாலா, ‘ஆடுகளம்’ படத்திற்காக வெற்றி மாறன் ஆகியோர் விருதினை பெற்றிருக்கிறார்கள்.
67 வருட தேசிய விருது நிகழ்வில் ஒரே ஒரு விருதுதான் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்கிற பிரிவில் கிடைத்திருக்கிறது. அந்த விருதை `காக்கா முட்டை’ திரைப்படம் பெற்றிருக்கிறது.
1967 ஆம் ஆண்டில் இருந்து சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை தமிழ் சினிமாவில் இருந்து முதல் முறையாக 1971 ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன்’ படத்திற்காக எம்.ஜி.ஆர் வென்றார். அதன் பின்னர் கமல்ஹாசனுக்கு
மூன்றாம் பிறை’, நாயகன்’,
இந்தியன்’ ஆகிய படங்களுக்காக மூன்று முறையும், பிதாமகன்’ படத்திற்காக விக்ரமுக்கும்,
காஞ்சிவரம்’ படத்துக்காக பிரகாஷ் ராஜும், ஆடுகளம்’,
அசுரன்’ ஆகிய படங்களுக்காக தனுஷுக்கு இரண்டு முறையும் கிடைத்திருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கபடவே இல்லை. ஆனால், 1996 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்பட்டது.
`தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் சரண்யா பொன்வண்ணன் துணை நடிகையாக இருந்தாலும், அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது அந்தப் படத்துக்காக் கிடைத்தது.
1967 ஆம் ஆண்டு முதல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே ‘குழந்தைக்காக’ எனும் தமிழ்ப் படத்திற்காக பேபி ராணிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்தது.
1967 ஆம் ஆண்டு முதல் சிறந்த இசையமைப்பாளருக்காக விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே கந்தன் கருணை’ படத்திற்காக கே.வி.மகாதேவன் இந்த விருதினைப் பெற்றார். இதுவரைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தமிழ்ப் படங்களுக்காக நான்கு முறையும், இந்தி படத்திற்காக ஒரு முறையும் என மொத்தம் ஐந்து முறை வென்றிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வரை சிறந்த இசையமைப்பாளர் என கொடுக்கப்பட்டு வந்த இந்த விருது, 2009 ஆம் ஆண்டில் இருந்து பாடல்களுக்கு தனியாகவும், பின்னணி இசைக்கு தனியாகவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி பிரிக்கப்பட்ட முதல் ஆண்டு
பழசி ராஜா’ எனும் மலையாளப் படத்திற்காகவும் 2015 ஆம் ஆண்டு `தாரை தப்பட்டை’ படத்திற்காகவும் இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், “சிறந்த இசையமைப்பாளர் என்றால் அது பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் சேர்த்தே கொடுக்க வேண்டும். இப்படி பிரிப்பது சரியில்லை’’ என இளையராஜா அந்த விருதினை வாங்க மறுத்துவிட்டார்.
1968 ஆம் ஆண்டு முதல் சிறந்த பாடகிக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே உயர்ந்த மனிதன்’ படத்தில்
நாளை இந்த வேளைப் பார்த்து’ பாடல் பாடிய பி.சுசிலாவுக்கு இந்த விருது கிடைத்தது. இதுவரைக்கும் இந்தப் பிரிவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 14 விருதுகள் கிடைத்திருக்கிறது.
1968 ஆம் ஆண்டு முதல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே ‘குழந்தைக்காக’ எனும் தமிழ்ப் படத்திற்காக கண்ணதாசனுக்கு இந்த விருது கிடைத்தது. இதுவரைக்கும் இந்தப் பிரிவில் மொத்தம் 7 விருதுகளை வைரமுத்து வெற்றிருக்கிறார்.
பாடகர் உன்னி கிருஷ்ணன், அவரது மகள் பாடகி உத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் என இவர்கள் அனைவரும் தங்களது முதல் படத்திலேயே தேசிய விருதினை வெற்றிருக்கிறார்கள்.
கடந்த 20 வருடங்களாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எனும் புதிய பிரிவை ஆரம்பித்து விருதுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் 10 வருடங்கள் தமிழ்ப்படங்களுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. அந்தப் பத்து படங்களில் காதலன்’,
இந்தியன்’, ஜீன்ஸ்’,
அந்நியன்’, சிவாஜி’,
எந்திரன்’ என ஷங்கர் இயக்கிய ஐந்து படங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது.
கடந்த நான்கு வருடங்களாகத்தான் சிறந்த சண்டை இயக்குநருக்காக விருதுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் இந்தப் பிரிவில் எந்த தமிழ்ப்படமும் விருது வாங்கவில்லை. ஆனால், சென்ற ஆண்டு `கே.ஜி.எஃப்’ எனும் கன்னடப் படத்துக்காக கோலிவுட் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ், விருது வென்றனர்.