தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் (Omicron) திரிபு கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் திரிபு கொரோனா வைரஸின் மற்ற திரிபுகளில் இருந்து எப்படி மாறுபட்டது?
ஒமிக்ரான் (Omicron)
தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டுபிடிக்க கொரோனா வைரஸின் புதிய திரிபான B 1.1.529 குறித்து உலக சுகாதார அமைப்புக்குக் கடந்த 24-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், போஸ்ட்வானா, ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க அகர வரிசையில் 15-வது எழுத்தான ஒமிக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸை, கவலையளிக்கும் வைரஸ் திரிபாக (Variant of Concern) உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு உள்ளிட்ட 4 திரிபுகளை இப்படி வகைப்படுத்தியிருக்கிறது.
ஒமிக்ரான் திரிபு – மருத்துவத் துறை எச்சரிப்பது ஏன்?
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் செல்களுக்குள் நுழைவதற்கு ஸ்பைக் புரோட்டீனைப் பயன்படுத்துகிறது. இதன்மூலமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஒமிக்ரானின் ஸ்பைக் புரோட்டீனில் 30-க்கும் மேற்பட்ட திரிபுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரோட்டீனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டவை. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்டா திரிபை விட வேகமாகப் பரவுமா?
உலக சுகாதார அமைப்பால் கவலையளிக்கக் கூடிய திரிபாக (VoC) வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், டெல்டா திரிபை விட இது வேகமாகப் பரவுமா என்பது குறித்து போதிய தரவுகள் இதுவரை இல்லை. இதுகுறித்த ஆய்வுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, `ஒமிக்ரான் திரிபால் மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அதற்கான பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. புதிய திரிபால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு இதுவரை பதிவாகவில்லை.
தடுப்பூசியில் இருந்து தப்புமா?
மருத்துவ ஆய்வாளர்களைப் பொறுத்தவரை வைரஸ் என்பது தடுப்பூசி உள்ளிட்ட எதிர்ப்பு மருந்துகளிடமிருந்து தப்ப மாற்றமடைந்து கொண்டே இருக்கும். அந்தவகையில், ஒமிக்ரான் என்ற புதிய திரிபாக மாற்றமடைந்திருக்கிறது. இதனால், தடுப்பூசி அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்ப வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ டேட்டா இன்னும் வெளிவரவில்லை. அதேநேரம், இன்புளூயன்சா வைரஸ் தடுப்பூசி போல் கொரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி கொண்டுவரவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அறிகுறிகள் மாறுபடுமா?
பொதுவாக கொரோனா பாதித்தவர்களுக்கு ஏற்படும் வறட்டு இருமல், சளி, இரவில் வியர்த்தல், உடல் வலி போன்ற அறிகுறிகளே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இதுவரை ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட 81% பேருக்கு இந்த அறிகுறிகள் தீவிரமானதாக இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த புதிய வகை திரிபின் தீவிரம் குறித்து தெரிய வர இன்னும் ஒருசில வாரங்கள் ஆகலாம். புதிய வகைத் திரிபைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஏஞ்சலிக் கோயெட்ஸ் (Angelique Coetzee), அறிகுறிகள் ரொம்பவே குறைவாகவும், இதுவரை இல்லாத வகைகளிலும் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
குழந்தைகளைத் தாக்குமா?
தென்னாப்பிரிக்காவில் 30 வயதுக்கும் குறைவானவர்களிடையேதான் முதல்முறையாக இந்த திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் தொடங்கி சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களிடம் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பலருக்கும் பெரிதாக அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் லேசான அறிகுறிகளே தென்பட்டதாகவும் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும், வெகுசிலருக்கே காய்ச்சல் இருந்ததாகவும், அவர்களில் பலர் தாமாகவே குணமடைந்துவிட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. இதன் முழுமையான பாதிப்பைக் கண்டறிய ஒரு சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை கூட நேரம் எடுக்கலாம் என்கிறார்கள்.
Also Read – Omicron: கிரேக்க வார்த்தை `Xi’ தவிர்க்கப்பட்டது ஏன்.. சர்ச்சையில் உலக சுகாதார அமைப்பு!