இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பது கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. மார்ச் 26-ம் தேதி ஒருநாளில் மட்டும் இந்திய அளவில் கொரோனா தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,000-த்தைத் தாண்டியிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 30,000-த்துக்கும் கீழ் இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த கடந்தாண்டு செப்டம்பர் மாத மத்தியில் கூட தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,000 – 60,000-த்தை எட்ட 23 நாட்கள் கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது. ஆனால், இப்போது 10 நாட்கள் என்ற அளவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,000-த்துக்கும் அதிகமாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 100 நாட்கள் வரை இருக்கலாம் என்கிறது எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யா காண்டி கோஷ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். அந்த ஆய்வின்படி, கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏப்ரல் இரண்டாவது பாதியில் அதிகமாகலாம் என்றும் மே இறுதிக்குள் 25 லட்சம் பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம், இரண்டாவது அலை பாதிப்பைச் சமாளிக்க லாக்டௌனை விட தடுப்பூசியே கைகொடுக்கும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

முதல் அலையின் பாதிப்பு அதிகபட்சமாக இருந்தபோது பதிவான பாதிப்பு எண்ணிக்கையைவிட இரண்டாவது அலையின்போது தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம். பிரான்ஸ் நகரங்களில் முதல் அலை பாதிப்பு எண்ணிக்கையைவிட இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.5 மடங்கு அதிகமாக இருந்ததையும் எஸ்.பி.ஐ ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவை தினசரி 52 லட்சம் டோஸ்கள் தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள 34 லட்சம் என்ற அளவில் இருந்து 40-45 லட்சமாக உயர்ந்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா இப்போது இருக்கிறது. இந்திய அளவில் தினசரி தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் சுமார் 60 சதவிகிதம் பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்த வேகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவினால், கடந்த செப்டம்பரில் இருந்ததை விட அதிகமான பாதிப்புகள் பதிவாகலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதேபோல், மார்ச் 25-ல் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவில் தொற்று எண்ணிக்கை பதிவானது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனா முதல் அலையின்போது மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்கள் தவிர தினசரி பாதிப்பு எண்ணிக்கை கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் 10,000-த்தைக் கடந்திருந்தது. தமிழகத்தில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது 7,000 ஆக இருந்தது. இப்போது தமிழகம், கர்நாடகாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000 என்ற அளவில் இருக்கிறது. பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 500 ஆக இருந்தது. பிப்ரவரி தொடக்கத்தில் ஆந்திராவில் இரட்டை இலக்கத்தில் தினசரி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்தை நெருங்குகிறது.
மார்ச் 26-ல் நாடு முழுவதும் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில், 79.57 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர், கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சொல்கிறது மத்திய சுகாதாரத்துறையின் தரவுகள்.