தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) எடுத்திருக்கும் நடவடிக்கையால் குறிப்பிட்ட சில வங்கிகளின் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளின்போது ஓடிபி வருவதில் சிக்கல் ஏற்படலாம்.
பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அடுத்த சில நாட்களுக்கு ஆன்லைன் பணபரிவர்த்தனையின்போது OTP வருவதில் சிக்கல் ஏற்படலாம். டிராய் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த பிரச்னை வரலாம்.
மோசடி எஸ்.எம்.எஸ்களுக்கு எதிரான நடவடிக்கை
மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் டிராய் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களின் மாதிரிகளைப் பதிவு செய்யும்படி நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தது டிராய். மோசடிகளுக்கு இலக்காகாமல் வாடிக்கையாளர்களைக் காக்கும் வகையில், சரியான குறுஞ்செய்திகள் மட்டுமே அவர்களைச் சென்றடையும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், டிராய் எடுத்த இந்த நடவடிக்கையின் தீவிரத் தன்மையை பெரும்பாலான நிறுவனங்கள் புரிந்துகொள்ளவில்லை.
என்ன பிரச்னை?
நிறுவனங்களுக்கு உரிய கால அவகாசம் கொடுத்துவிட்டதாகச் சொல்லும் டிராய், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களைப் பதிவு செய்ய கடைசி நாளாக மார்ச் 31-ஐ கெடுவாக விதித்திருக்கிறது. இதுவரை குறுஞ்செய்திகளின் மாதிரிகளைப் பதிவு செய்யாத 40 நிறுவனங்கள் பட்டியலை டிராய் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
என்ன நடக்கும்?
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய நடைமுறை அமலுக்கு வரும். இதனால், குறிப்பிட்ட இந்த வங்கிகளின் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளின்போது அனுப்பப்படும் OTP-க்கள் பிரச்னைக்குரியதாகக் கருதப்பட்டு தடுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. அதனால், வாடிக்கையாளர்களுக்கு OTP வருவதில் பிரச்னை ஏற்படலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.