மருது சகோதரர்களில் இளையவரான சின்ன மருது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த போர்ப்பிரகடனத்தையே ஜம்புத் தீவு பிரகடனம் என்கிறார்கள். 1847 சிப்பாய்க்கலகத்துக்கு 46 ஆண்டுகள் முன்பாகவே 1801 ஜூன் 16-ம் தேதி இந்தப் போர்ப்பிரகடனம் வெளியிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆங்கிலேயர் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பாக பாளையக்காரர்கள் ஆளுகையின் கீழ் இருந்தது. இதில், 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். இதில், சிவகங்கை சீமையும் ஒன்று. அதை பெரிய மருது, சின்ன மருது என மருது சகோதரர்கள் ஆண்டு வந்த காலத்தில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் கை ஓங்கத் தொடங்கியிருக்கிறது. ஆங்கிலேய படைத் தளபதி கர்னல் அக்னியூ வெளியிட்ட அறிவிப்பு எதிராக திருச்சி மலைக்கோட்டை வாயிலில் மக்கள் முன்னிலையில் சின்ன மருது ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதுவே ஜம்புத் தீவு பிரகடனம். வேலூர் சிப்பாய்க்கலகமே இந்தியாவின் முதல் சுதந்திரக் குரலாக அறியப்படுகிறது.
ஆனால், 1801ம் ஆண்டே மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டதாக ஆவணங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு நாவலந்தீவு என்றும் ஜம்புத் தீவு என்றும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. நாவல் மரங்கள் நிறைந்த தீவு என்ற பொருள்படும் வகையிலான நாவலந்தீவில் இருக்கும் பாரதம் என்று ஒரு சில இடங்களில் குறிப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதைக் குறிப்பிட்டே ஜம்புத் தீவு பிரகடனம் என்ற பெயரில் மருது சகோதரர்கள் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டதாகச் சொல்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டை மட்டுமல்லாது ஸ்ரீரங்கம் கோயிலும் இந்தப் பிரகடனத்தை மக்கள் முன்னிலையில் வெளியிட்ட அவர்கள், அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், 1801-ல் நடைபெற்ற போரில் மருது சகோதரர்கள் தோல்வியைத் தழுவினர். சுமார் 140 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போரின் இறுதியில் காளையார் கோயிலை பீரங்கியால் தகர்த்துவிடுவோம் என ஆங்கிலேயர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கோயிலைக் காப்பதற்காக சரணடைந்த மருது சகோதரர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என சுமார் 500 பேரைத் திருப்பத்தூர் கோட்டை முன்பாக 1801 அக்டோபர் 24-ல் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். மருது சகோதரர்களுக்கு காளையார் கோயிலின் உள்ளே சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜம்புத் தீவு பிரகடனம்
மருது சகோதரர்களின் ஜம்புத் தீவு பிரகடனத்தில், “இதை காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்’மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக ஐரோப்பியர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி அவரது அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கி நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாக கருதி ஆட்சி அதிகாரம் செய்து வருகின்றனர்.
மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கின்றனர். சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. 1,000 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் ராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்நியன் கீழ் தொண்டுபுரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் எல்லாரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதை கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்துவிட வேண்டும். அவர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். ஒட்டப்பட்ட இந்த அறிவிப்பை சுவற்றிலிருந்து எவனொருவன் எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களை செய்தவனாகக் கருதப்படுவான்.
இப்படிக்கு
மருது பாண்டியன் – பேரரசர்களின் ஊழியன் – ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி’’ என்று ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க ஆலோசகர் சுப்பு.