கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிப்படையக்கூடாது என்பதற்காக மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய நாள்களில் ஏழை மாணவர்கள் மொபைல் மற்றும் கணினி வசதி இல்லாததால் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு சென்றனர். இந்த பிரச்னையில் இருந்து விடுபட மாணவர்களுக்கு சில மாநில அரசுகள் உதவிகளை செய்தன. இந்த நிலையில், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாணவர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றன. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் 1 : நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ராசிபுரம் பகுதியில் பெரப்பன் சோலை எனும் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 3,500-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். பெரப்பன் சோலை பகுதிகளில் சரியாக மொபைல் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதியில் செல்போன் பேசுவதற்கே போதுமான சிக்னல் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்கள் பல கி.மீ தொலைவு நடந்து சென்று வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் உள்ள உயரமான மரக்கிளைகள் மற்றும் பாறைகளில் அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து அரசு போதிய டவர்களை அமைத்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வழியாக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் 2 : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி எனும் பகுதி உள்ளது. இங்கு பழங்குடி மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பகுதியில் சரியாக சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் ஊரில் இருக்கும் உயர்ந்த இடங்களுக்கு சென்று அமர்ந்து கல்வி பயில்வது தொடர்பான புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் டவர்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தன.
சம்பவம் 3 : தமிழக அளவில் மட்டுமல்லாது இந்த அளவிலேயே கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கோண்டியா என்ற மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமம் ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்கு சரியாக சிக்னல் கிடைக்காமல் திணறி வருகின்றனர். கோண்டியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அதுல் கோந்தலே என்ற மாணவர் தனது கிராமத்தில் இருந்து சுமார் 18 கி.மீ சிக்னலை தேடி நடந்து சென்றுள்ளார். இறுதியாக ஒரு மரத்தின் அருகே சிக்னலையும் கண்டுபிடித்துள்ளார். இதனால், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மரத்துக்கு `நெட்வொர்க் ட்ரீ’ என பெயர் வைத்துள்ளனர். அதுல் இதுதொடர்பாக பேசும்போது, “ஒவ்வொரு நாளும் படிப்பதற்காக இந்த மரத்தின் அருகே வர வேண்டும். மழைக்காலங்களில் மழையால் வகுப்புகளை தவற விடுகிறோம். சிக்னல் நன்றாக கிடைக்கும் ஒரே இடம் இதுதான். மற்ற இடங்களில் சிக்னல் கிடைப்பதில்லை” என்கிறார். அதுல் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.
மயூர் என்ற மாணவர் இதுதொடர்பாக பேசும்போது, “நாங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாது. புத்தகங்களை நாங்கள் இங்குக் கொண்டுவர வேண்டும். சில நேரங்களில் வகுப்புகள் முடிய இரவு 8 மணிக்கு மேல் ஆகும். எனினும், நாங்கள் இங்குதான் வர வேண்டும். ஏனெனில், சிக்னல் பிரச்னை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களாக அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் நோட்புக்குகள், மொபைல் போன் மற்றும் ஹெட்போன்களை எடுத்துக்கொண்டு இந்தப் பகுதிக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் மொபைல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. ஆனால், தற்போது சிக்னல் பெரும்பாலான மாநிலங்களில் பிரச்னையாக இருந்து வருகிறது. திடீரென்று சிக்னல் பிரச்னை வரவில்லை. கடந்த பல மாதங்களாகவே, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் வகுப்பு தொடங்கிய நாள் முதலே கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு சிக்னல் சவாலாக இருந்து வருவதை இந்த சம்பவங்களின் வழியாக தெரிந்துகொள்கிறோம்.
சம்பவம் 4 : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளுக்கு குடை பிடித்தபடி நிற்க.. மகள் மொபைல் வழியாக ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு வைரலானது. அந்த மாணவர் மொபைல் சிக்னல் கிடைக்காததன் காரணமாக சாலைக்கு வந்து அமர்ந்துள்ளார். அப்போது மழை பெய்ததால் வேறு வழியின்று தந்தை குடைபிடிக்க ஆன்லைன் வகுப்பில் பங்கெடுத்துள்ளார்.
கட்டிகர், பல்லகா மற்றும் காமிலா ஆகிய பகுதிகளில் மாணவர்கள் வெளியே வந்து ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பது மிகவும் சாதாரணமானது என கூறப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள உள்ளூர்வாசிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை நம்பியுள்ளனர். மின்வெட்டு இருக்கும் நாள்களில் சிக்னலும் சேர்ந்து வேலை செய்வதில்லை என்கின்றனர். புகைப்படம் வைரலானதை அடுத்து இந்த பிரச்னைகளை விரைவில் தீர்க்க முயற்சி எடுப்பதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read : கேரள நீதிமன்ற உத்தரவு.. தயாரிப்பாளரின் விளக்கம் – `கைதி’ பட விவகாரத்தில் என்ன நடந்தது?