பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் மூத்த தலைவர்கள், புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வெளியான அமைச்சர்களின் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்று குறுகிய காலத்திலேயே மத்திய அமைச்சர் ஆக பதவியேற்றிருக்கும் எல்.முருகன் கடந்து வந்த பாதையைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்!
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோனூர் பகுதியில் 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி எல். முருகன் பிறந்தார். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மட்டுமல்லாது பா.ஜ.க-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி பிரிவிலும் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். பின்னர், கேரள மாநிலப் பொறுப்பாளராகவும் அம்பேத்கர் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கள் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தனபால் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எல்.முருகன் வெறும் 1,730 வாக்குகளை மட்டுமே பெற்று அந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஆகவும் பணியாற்றினார். அப்போது, நாட்டின் பல பகுதிகளிலும் அடிமைகளாக இருந்த பட்டியலின மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வழி செய்துள்ளார். தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக கட்சியின் தலைமையிடம் பெயர் வாங்கியிருந்தார். இது அவருக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று கொடுத்தது.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்? என்ற கேள்வி பா.ஜ.க நிர்வாகிகள் உட்பட பலரது மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பதவிக்கு எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க தலைமையின் இந்த முடிவு உள்கட்சியினரிடையே சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் அவர்களது வாயை மூடும் விதமாக எல்.முருகன் தன்னுடைய பணிகளை மேற்கொண்டார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இவர் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் `கந்தசஷ்டிக் கவசம்’ பாடலை இழிபடுத்திவிட்டார்கள் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேல் யாத்திரையை அறிவித்தார். கொரோனா பரவல், காவல்துறையினர் கெடுபிடி ஆகியவற்றுக்கு எதிராக இந்த வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இது தமிழக பா.ஜ.க மக்கள் மட்டுமன்றி வெகுஜன மக்கள் சிலரிடமும் வரவேற்பை பெற்றன.
எல்.முருகன் தலைமையில் இருக்கும்போதுதான் ஏராளமான பிரபலங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அதுமட்டுமின்றி, தேர்தல் நேரங்களில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இணையாக பிரசாரங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்தார். இதன் பலனாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு இடங்களில் பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைத்தது. இந்த சம்பவங்கள் எல்லாம் பா.ஜ.க தலைமையினரிடம் எல்.முருகன் மீது அதிக மதிப்பைக் கொடுத்தது. இதன் விளைவாகவே தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைமை நிர்வாகிகள் இவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை வழங்கியுள்ளனர். சர்ச்சைகளிலும் எல்.முருகன் சிக்கியுள்ளார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அப்போது, அவரின் வெளிப்புற அழுத்தம் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கினார்.
தகவல், ஒலிபரப்புத்துறை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் பொறுப்பு தற்போது எல்.முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய இணையமைச்சராக இருப்பதற்கு மக்களவை உறுப்பினராகவோ அல்லது மாநிலங்களவை உறுப்பினராகவோ இருப்பது அவசியம். எனவே, அவர் பதவியேற்றதில் இருந்து ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போதைய சூழலில் மக்களவையில் உறுப்பினராவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பதால் அவர் மாநிலங்களவையில் உறுப்பினராவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதிலும் சிறிய பிரச்னை உள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். எனவே, தற்போது அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சில ஆண்டுகளில் சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களும் காரணம் என்றும் பா.ஜ.க வலிமை இல்லாத இடங்களை வலிமைப்படுத்த இத்தகைய முடிவை பா.ஜ.க தலைமை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய இணையமைச்சராக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பான விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எல்.முருகன், “மீனவர்களின் நலனைப் பாதுகாக்கவும் மீன்வளத்தைப் பெருக்கவும் நடவடிக்கைகளை எடுப்பேன். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தொடர்வேனா? என்பதை பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read : சாண்ட்விச் செல்லர் டு பாலிவுட் லெஜண்ட் – திலீப் குமாரின் அசாத்திய பயணம்