ஆப்கானிஸ்தானின் கந்தகார் அருகே நடந்த தாலிபான்கள் – அரசுப் படைகள் இடையிலான மோதலில் இந்திய போட்டோ ஜர்னலிஸ் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். அரசுப் படைகளோடு இணைந்து மோதல் நடந்த பகுதிகளில் படம்பிடிக்கச் சென்றிருந்த புலிட்சர் விருது வென்ற டேனிஷின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வலியைப் பதிவு செய்ததற்காக பத்திரிகை துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் புலிட்சர் விருது வென்றவர் டேனிஷ் சித்திக். கரியரின் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிருபராகப் பணியாற்றிய அவர், பின்னர் போட்டோ ஜர்னலிஸ்டாக மாறினார். சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸில் முதன்மை போட்டோகிராஃபராகப் பணியாற்றி வந்தார். கொரோனா பெருந்தொற்றின் வலியைப் பதிவு செய்த இவர் போட்டோ சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் அரசுப் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த போரை ஆவணப்படுத்தி வந்தார். இதற்காக அரசுப் படைகளோடு தொடர்ந்து பயணித்த அவர், கடந்த 13-ம் தேதி படையினரோடு தாம் பயணித்த வாகனம் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து வீடியோவாகவும் பதிவிட்டிருந்தார்.
`3 ஆர்.பி.ஜி வகை குண்டுகளால் தாக்கப்பட்டோம். இப்போது உயிரோடு இருப்பது என் அதிர்ஷ்டம்தான்’ என்று ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார் டேனிஷ். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ஆதரவுப் படைகள் திரும்பப் பெற்ற பின்னர், அங்கு தாலிபான்கள் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றி வரும் தாலிபான்கள், தொடர்ச்சியாக மற்ற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் மொத்தமிருக்கும் 34 மாகாணங்களில் 29 மாகாணங்களில் இருக்கும் அரசு கட்டடங்களைக் குறிவைத்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. காந்தஹார் அருகே ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் இருதரப்புக்கும் நடந்த மோதலில் டேனிஷ் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரீத் மமுண்டிஸி, `புலிட்சர் விருது பெற்ற இந்திய ஜர்னலிஸ்ட், நண்பர் டேனிஷ் சித்திக் காந்தஹார் அருகே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். காபூல் செல்வதற்கு முன்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரை நேரில் சந்தித்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் ராய்ட்டர்ஸ் குழுவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
டேனிஷ் ஆவணப்படுத்திய பிரச்னைகள்
ரோஹிங்கியா முஸ்லீம்கள் பிரச்னை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்து வரும் போர் சூழல், ஹாங்காங் போராட்டங்கள், நேபாள நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பதிவு செய்துவந்தவர். இவருக்காக ராய்ட்டர்ஸ் இணையதளத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில், பத்திரிகை துறையின் பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்று பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. `பல்வேறு பிரச்னைகள் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு ஈடுபாடு அதிகம்’ என டேனிஷ் கூறியிருக்கிறார்.
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் சிஏஏ போராட்டத்துக்கு எதிராக நடந்த வன்முறையின்போது போலீஸாரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தை இவரது கேமரா கச்சிதமாகப் படம் பிடித்தது. அதேபோல், டெல்லியில் மண்டியிட்ட நிலையில் இருந்த இஸ்லாமியர் ஒருவரை சூழ்ந்துகொண்டு ஒரு கும்பல் கொலைவெறியோடு தாக்குதல் நடத்திய தருணத்தை இவர் எடுத்திருந்த போட்டோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொரோனா லாக்டவுன் முதற்கட்டமாக 21 நாட்கள் விதிக்கப்பட்டபோது பலநூறு கிலோ மீட்டர்கள் கால்நடையாகவே சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் துயரத்தையும் கேமரா வழியாக உலகறியச் செய்தார்.
கொரோனா பெருந்தொற்று உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி டெல்லியில் குடியிருப்புப் பகுதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் எரியூட்டப்பட்ட காட்சியை டேனிஷ் படம் பிடித்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சீனாவின் ரோஹிங்கியா பகுதியில் முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறையை இவர் கேமரா வழியாக ஆவணப்படுத்தினார். இது அவருக்கு புலிட்சர் விருதை பெற்றுக்கொடுத்தது.