இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தெரியாது என தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பேசியதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தெலுங்கின் மூத்த நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா அவ்வப்போது தனது கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் அவர் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்றே தெரியாது என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். லோக்கல் தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பாரத ரத்னா விருது குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய பாலகிருஷ்ணா, “இந்த விருதுகள் எல்லாம் எனது கால் தூசுக்கு சமமானவை. தெலுங்கு சினிமாவுக்கு எனது குடும்பம் அளித்த பங்களிப்புக்கு எந்த விருதும் ஈடாகாது. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற ஒருவர் ஆஸ்கர் விருது வென்றதாக நான் கேள்விப்பட்டேன். எனக்கு அவர் யாரென்றே தெரியாது. பாரத ரத்னா விருது என்பது என்.டி.ஆரின் கால் நகத்துக்கு ஒப்பானது. அவருக்குக் கொடுக்கவில்லையே என விருதுதான் கவலைப்பட வேண்டும். என்னுடைய குடும்பத்துக்கோ அல்லது எனது தந்தைக்கோ இதனால் எந்த வருத்தமும் இல்லை’’ என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ஏ.ஆர்.ரஹ்மானை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா நடித்த காமெடியான காட்சிகளைப் பதிவிட்டு ரசிகர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நரசிம்ம நாயுடு படத்தில் அவர் ஆடிய பரதநாட்டிய காட்சிகள்..!, ஹைதராபாத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு பாராசூட்டிலேயே பயணித்த காட்சிகள் போன்றவற்றைப் பதிவிட்டு பாலகிருஷ்ணாவுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அந்தப் பேட்டியில் தன்னை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் ஒப்பிட்டும் பாலகிருஷ்ணா பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஷூட்டிங்கை பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டிருப்பார். அப்படி இல்லாமல் என்னுடைய படத்தின் ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவே நான் விரும்புவேன். அதிகப்படியான படங்களை உருவாக்கி, குறுகிய காலத்தில் நிறைய ஹிட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய வொர்க்கிங் ஸ்டைல்’’ என்று தெரிவித்தார்.
சிம்ஹா, லெஜண்ட் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவுடன் அகண்டா படத்துக்காக பாலகிருஷ்ணா கைகோர்த்திருக்கிறார். பிரக்யா ஜெய்ஸ்வால் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அகண்டா படம் கடந்த மே மாதமே ரிலீஸாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
Also Read – `3 தகவல்கள்… 2 கேரக்டர்கள்… ஒரு சம்பவம்!’ – பாரதிராஜா மேஷ்அப் #HBDBharathiraja