கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என தந்தை ஒருவர் கடந்த 18-ம் தேதி புகார் அளித்திருந்தார். மண்டபம் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த தனது 15 வயது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரை அடுத்து வழக்குப் பதிந்த போலீஸார் சிறுமியைத் தேடி வந்தனர். புகார் அளித்து இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் தனது மகளை அவர் பார்த்திருக்கிறார். அதன்பின்னர், சிறுமியை காவல்நிலையம் அழைத்து வந்திருக்கிறார் தந்தை. இதையடுத்து அந்த வழக்கு சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையில் இருக்கும் ஒரு வீட்டில் குழந்தையப் பார்த்துக் கொள்ளும் வேலையில் சிறுமியை அவரது தந்தை சேர்த்து விட்டிருக்கிறார். அந்த வேலை சிறுமிக்குப் பிடிக்காததால், ஏற்கெனவே குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதிக்குச் சென்று, பக்கத்து வீட்டில் இருந்த காவலாளி புருஷோத்தமன் ஜனா (46) என்பவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரும் சிறுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். புருஷோத்தமன் செல்போனில் இருந்து தனது தோழியின் நண்பர்களுக்கு போன் செய்து இருக்கும் இடத்தை சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து, அங்கு வந்த நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சென்றதாகத் தெரிகிறது. மறுநாள் காலையில் புருஷோத்தமன் வேலைக்கு சென்ற பின்பு அந்த இல்லத்துக்கு வந்த அவர்கள் சிறுமியிடம் அத்துமீறி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை அறிந்த புருஷோத்தமன் இரவு நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, செல்போன் டவர் மூலம் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலீஸார், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கிரீம்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். மேலும், காவலாளி புருஷோத்தமன் ஜனாவையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது போக்சோ, சிறுமியை கடத்தியது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read – சென்னையில் கைவரிசை காட்டிய ஈரான் கும்பல்… போலீஸ் வளைத்தது எப்படி?