கும்பகோணத்தில் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்தி மக்களிடம் ரூ.600 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் பா.ஜ.க வர்த்தக அணி முன்னாள் நிர்வாகி எம்.ஆர்.கணேஷ் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமறைவாகியிருக்கிறார்கள்.
ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி அருகே இருக்கும் தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் – எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள். தொழிலதிபர்களான இவர்கள் கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். கும்பகோணம் அருகில் இருக்கும் கொற்கை கிராமத்தில் சொந்தமாக பால்பண்ணை வைத்து நடத்தி வரும் இவர்கள், வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தகர் பிரிவு தலைவராகவும் எம்.ஆர்.கணேஷ் இருக்கிறார். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் இவர்களை அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே அழைக்கிறார்கள். கணேஷ் மகனின் முதல் பிறந்தநாளின்போது வானில் இருந்து ஹெலிகாப்டரில் மலர்தூவி அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்கள் இந்த சகோதரர்கள்.
மோசடி புகார்
இந்தநிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா – பைரோஸ் தம்பதியினர் தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் ஹெலிகாப்டர் பிரதர்ஸுக்கு எதிராக சமீபத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அந்தப் புகாரில் தங்களிடம் ரூ.15 கோடி வரை பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள மக்களிடம் நிதி நிறுவனம் மூலம் ரூ.600 கோடி அளவுக்கு ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி செய்துவிட்டதாக நகரின் பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று கூறி கும்பகோணம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரிடமும் பணத்தை வாங்கியிருக்கிறார்கள். ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொரோனா சூழலால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை என்று கூறி அவர்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். இதையடுத்தே தஞ்சை எஸ்.பி ஆபிஸ் வரை புகார் சென்றிருக்கிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் புகார் கூறியிருக்கும் நிலையில், எம்.ஆர்.கணேஷ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சதீஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
போலீஸ் விசாரணை
ஹெலிகாப்டர் பிரதர்ஸின் மோசடி குறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், அவர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள். விக்டரி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அந்த நிறுவன ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. அவரது வீட்டில் இருந்த் 12 சொகுசு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.