இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கடந்த பல மாதங்களாக கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கான சூழல் இல்லாததால் சுற்றுலாத்துறை அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் மக்கள் மனதளவிலும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாத்தலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரிவெஞ்ச் ஷாப்பிங் போலவே ரிவஞ்ச் டிராவல் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பயணிக்க முடியாமல் தவித்து வந்த மக்கள் தங்களது பயண ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் மொத்தமாக படையெடுத்ததுபோல சுற்றுலா செல்வதையே ரிவெஞ்ச் டிராவல் என்பார்கள். அந்த வகையில், மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இல்லாத அதே நேரத்தில் மிகவும் அழகான இடங்களைத் தேர்ந்தெடுத்து சுற்றுலா விரும்பிகள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். பொதுவான இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிம்லாவுக்கு அருகில் உள்ள மஷோபிரா, உதய்பூருக்கு அருல் உள்ள கும்பல்கர், முசூரிக்கு அருகில் உள்ள லேண்டூர் போன்ற இடங்களைத் தேடி பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த இடங்கள் கமர்ஷியலான இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கமர்ஷியலாக இல்லாத பகுதிகளில் தங்குவதற்கான இடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் மக்கள் கூட்டம்கூட வாய்ப்புகள் குறைவு. அதுமட்டுமல்லாமல் லோக்கல் டச் உள்ள அமைதியான இடங்களில் நிம்மதியாக வாழவே இப்போது மக்கள் பெரும்பாலும் விரும்புவதாக கூறப்படுகிறது. நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது பரம்பரை வீடுகள் இருக்கும் பகுதிக்குச் சென்று வாழ விரும்புகின்றனர். மக்கள் சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு ரயில்களை இயக்க தயாராகி வருகிறது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் பேசும்போது, “சுற்றுலா ரயில்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இயக்கப்பட உள்ளன. மக்கள் பல்வேறு ஆன்மீக இடங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆடி அமாவாசை சிறப்பு சுற்றுலாவுக்கு மட்டும் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். விமான சுற்றுலாவுக்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. இதுதொடர்பான முழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.
Also Read : டெல்லியில் மோடியுடனான சந்திப்பு ஏன்… எடப்பாடி பழனிசாமி சொன்ன விளக்கம்!