இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பரான சவீதா புனியா பற்றி தெரியுமா…. கோடிக்கணக்கான இந்தியர்களின் பதக்கக் கனவுகள் மெய்ப்பட இந்திய அணியின் கோல் போஸ்டை சுவராக நின்று போராடிய இவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? #PR Sreejesh – Savita Punia
PR Sreejesh
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கிழக்கம்பலம் கிராமத்தில் பிறந்த ஸ்ரீஜேஷ், 12 வயதிலேயே ஹாக்கி ஸ்டிக்கைப் பிடிக்கத் தொடங்கிவிட்டார். முதலில் தடகள வீரராகவும், உயரம் தாண்டுதல், வாலிபால் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவரின் கவனத்தை ஹாக்கியை நோக்கி திருப்பியது அவரது கோச். ஸ்ரீஜேஷின் ஹாக்கி கனவை நனவாக்க தனது வீட்டில் இருந்த பசுமாட்டை விற்று முதல் ஹாக்கி கிட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார் அவரது தந்தை. ஹாக்கி ஸ்டிக்கோடு நேசம் கொண்ட அவருக்கு 2014-ல் இந்திய ஜூனியர் அணியில் இடம்கிடைத்தது. அதன்பின்னர் 2016-ல் சீனியர் டீமுக்காக விளையாடத் தொடங்கிய அவர், இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தார்.
தென்கொரியாவின் இன்சியான் நகரில் 2014-ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியின் இரண்டு பெனால்டி ஷூட்டைத் தகர்த்தது இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. அதே ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்தியா மூன்றாவது இடமே பிடித்திருந்தாலும், தொடரின் சிறந்த கோல்கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஸ்ரீஜேஷின் சிறப்பான செயல்பாடுகளால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு அவர் கொண்டுவரப்பட்டார். ரியோ ஒலிம்பிக்கின் காலிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, பெல்ஜியத்திடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதன்பின்னர் வந்த இரண்டு, மூன்று ஆண்டுகள் அவர் வாழ்வின் முக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. 2017 ஏப்ரலில் நடந்த அஷ்லான் ஷா கோப்பை தொடரில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரீஜேஷ், மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்தார். தனது கரியரின் மிகப்பெரிய பிரேக் என்று அவர் கூறும் அந்தக் காயத்திலிருந்து மீண்டு 2017 செப்டம்பரில் அணியில் இணைந்தார். 2018 ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கிய அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படவில்லை.
ஆனால், அது ஸ்ரீஜேஷுக்கு பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. கேப்டன் மன்ப்ரீத் சிங்கோடு கைகோர்த்து அவர் இந்திய அணியின் வெற்றி வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று 41 ஆண்டுகால ஒலிம்பிக் பதக்க தாகத்தைத் தீர்த்திருக்கிறது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. இதற்கு முன்னர் 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தது இந்திய அணி.
Savita Punia
ஹரியானாவின் ஜோத்கா என்ற குக்கிராமத்தில் இருந்து தொடங்கியது சவீதாவின் ஹாக்கி பயணம். சிர்ஸாவில் இருக்கும் அரசு ஹாக்கி பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர் ஜோர்காவில் இருந்து தனது ஹாக்கி கிட்டோடு பேருந்துகளில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். பேருந்தில் கிட்டோடு ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களும் அவருக்கு நடந்திருக்கின்றன. அதேபோல், நடத்துநர்கள் கிட்டை ஏறி மிதித்துவிட்டார்கள் என்று பலமுறை தந்தையிடம் புகாராகவே சொல்லிய சம்பவங்களையும் அவர் ஒருமுறை நினைவுகூர்ந்திருக்கிறார்.
பார்மஸிஸ்டான தந்தை மஹிந்தர்சிங் புனியா, இளம் வயதிலேயே மகளின் ஹாக்கி ஆர்வத்தை சரியாகக் கண்டுகொண்டு அங்கீகாரம் அளித்தார். முதலில் மிட் ஃபீல்டராகவோ அல்லது ஃபார்வார்ட் பிளேயராகவே விரும்பிய சவீதா, பயிற்சியாளர் சுரேந்தர்சிங் கரபின் வழிகாட்டுதலின்படி கோல்கீப்பராகப் பயிற்சி பெற்றார். 2003- 2007 வரை கரப் அவருக்குப் பயிற்சியளித்த நிலையில், தேசிய ஹாக்கி அகாடமிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர், தேர்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட சவீதா, 2007ம் ஆண்டு ஜூனியர் டீமில் தேர்வு செய்யப்பட்ட அவர், அடுத்த ஆண்டே சீனியர் டீமின் கோல்கீப்பரானார்.
ஜூனியர் டீம் மெம்பராக இருக்கும்போதே, மிட் ஃபீல்டர்கள், ஃபார்வார்டு பிளேயர்ஸோடு அதிக நேரம் செலவிடுவதை விரும்புபவர். அவர்களின் கேம் பிளான் எப்படியிருக்கிறது என்பதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப டிஃபன்ஸைத் திட்டமிடுவதில் கில்லாடி. ஹரியாவின் ஷபாத் ஹாக்கி ஃபீல்டில் அதிகம் உச்சரிக்கப்படும் நகரம். இப்போதைய கேப்டன் ராணி ராம்பால் உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களைக் கொடுத்திருக்கும் நகரம் அது. டெல்லியில் ஹரியானாவின் ஹிஸார் – ஷபாத் இடையே நடந்த ஹாக்கி போட்டியில் ஹிஸார் டீம் தோற்றிருந்தாலும், அந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக் மற்றும் அம்ரித் போஸ் ஆகியோர் இந்திய ஜூனியர் டீமுக்கான செலக்ஷனில் சவீதாவின் பெயரை பரிந்துரை செய்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதே சிரமம் என்ற நிலையில், காலிறுதிக்குத் தகுதிபெற்றது இந்திய மகளிர் அணி. முன்னாள் சாம்பியனும் உலகின் இரண்டாம் நிலை அணியுமான ஆஸ்திரேலியா, எளிதில் வென்றுவிடலாம் என்ற மனநிலையிலேயே காலிறுதியில் இந்திய அணியை அணுகியது. அந்தப் போட்டி சவீதாவின் டிஃபன்ஸ் திறனை உலகுக்கு எடுத்துக் காட்டியது. அந்தப் போட்டியில் 7 பெனால்டி கிக் உள்பட 8 கோல் வாய்ப்புகளைத் தகர்த்திருந்தார் சவீதா. அந்தப் போட்டியில் 1-0 என்று வரலாற்று வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் தோற்றிருந்தாலும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை ஆகஸ்ட் 6-ல் எதிர்க்கொள்கிறது இந்திய அணி. லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வீழ்த்தியிருந்தது.