திருநெல்வேலி மாவட்டம் இஞ்சிக்குழி வனப் பகுதியில் வசிக்கும் 100 வயதைக் கடந்த குட்டியம்மா பாட்டிக்கு அரசின் உதவித்தொகையை வழங்குவதற்காக மாதந்தோறும் 10 கி.மீ நடந்தே சென்று வருகிறார் தபால்நிலைய ஊழியர் கிறிஸ்துராஜ்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த காரையாறு அணைப் பகுதியைச் சுற்றியிருக்கும் வனப்பகுதியில் காணி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆங்காங்கே வசித்து வருகிறார்கள். இவர்களுக்காகவே பாபநாசம் பகுதியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்தத் தபால் நிலையத்தில் காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த கிறிஸ்துராஜா என்பவர் தபால் நிலைய ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
காரையாறு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வரும் 100 வயதைக் கடந்த குட்டியம்மா என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகையைப் பெற முயற்சி செய்து வந்திருக்கிறார். ஆனால், அவரது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த பல மாதங்களுக்கு முன்பு இஞ்சிக்குழி பகுதிக்கு வந்த கலெக்டர் விஷ்ணுவிடம் நேரடியாக மனுவை அளித்து கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையடுத்து, கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் உடனடியாக குட்டியம்மா பாட்டிக்கு உதவித் தொகை கிடைத்தது. வனப்பகுதியில் ஏடிஎம் வசதிகள் எதுவும் இல்லாததால், அவருக்குத் தபால் நிலையம் வாயிலாக உதவித் தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அடர் வனப்பகுதியில் வசித்து வரும் குட்டியம்மா பாட்டிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, குட்டியம்மா பாட்டி ஒருவருக்காக மாதந்தோறும் உதவித் தொகையைக் கொண்டு சேர்க்க தபால் நிலைய ஊழியர் கிறிஸ்துராஜா முன்வந்திருக்கிறார்.
அவர் ஒருவருக்காக வனப்பகுதிக்குள் சென்று வர ஒருநாள் ஆகிவிடும் என்பதால், வேலை நாட்களைத் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சென்று உதவித் தொகை வழங்குவதை கிறிஸ்துராஜா வழக்கமாக வைத்திருக்கிறார். அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பும் கிறிஸ்துராஜா, காலை, மதிய உணவுகளைக் கட்டி எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். வனத்துறையினர் உதவியுடன் காரையாறு அணைப்பகுதியில் படகில் செல்லும் அவர், சுமார் 10 கி.மீ தூரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்று குட்டியம்மா பாட்டியிடம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை அளித்துவிட்டு திரும்புகிறார். மாதந்தோறும் ஒரு நாள் இதற்காகவே செலவிடும் தபால் ஊழியர் கிறிஸ்துராஜின் செயல்பாடு பாராட்டைப் பெற்றிருக்கிறது.