கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் இசக்கியப்பன் என்பவருக்கு அரசுக்கு வரும் வருவாயை விட அதிக வருமானம் கிடைப்பதாக அலுவலகத்தின் வாயிலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சமீபகாலமாக லஞ்சம் தலைவிரித்தாடுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்தநிலையில், இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் இசக்கியப்பன் என்பவர் தினசரி அரசுக்கு வரும் வருமானத்தை விட கூடுதலாக வருமானம் பார்ப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
லஞ்சம்… லஞ்சம்…லஞ்சம்!’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில்,சார்பதிவாளர் என்.இசக்கியப்பன் வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்து, உடனே வேண்டுமென்றால் ரூ.2,000 முதல் 3,000 ரூபாய் வரை வசூலிக்கிறார். ஐந்து சென்ட் வீட்டு மனையை விற்க வேண்டும் என்றால், மனை சரியாக இருந்தாலும் 1 முதல் 5 நாட்கள் வரை அலுவலகத்துக்கு வரவழைத்து மனவேதனைக்கு உள்ளாக்குகிறார். பிறகு, `எனக்கு 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை வேண்டும்’ என பேரம் பேசி வாங்கிக் கொண்டு, அதைப் பதிவு செய்து கொடுக்கிறார். அந்த லஞ்சப் பணத்தை வாங்க 5 இடைத்தரகர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். ஏழை மக்கள் அத்தியாவசியத்துக்கு மனை வாங்கப் போனாலும், விற்கப் போனாலும் அவரிடம் மண்டியிட்ட பிறகுதான் பதிவு நடக்கும்.
அரசு ஆணைப்படி பதிவு செய்ய முடியாத பத்திரம் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றால், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால், ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்து விடுகிறார். அரசுக்கு வரும் வருவாயைவிட இவரது அக்கவுண்டுக்கு வரும் வருவாய் அதிகம். இதனால், பொதுமக்கள் மனவேதனையில் உள்ளனர். இந்த லஞ்சத்தை ஒழிக்க பதிவுத் துறை நடவடிக்கை எடுக்குமா?… இப்படிக்கு பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள்’’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து பத்திர பதிவுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.