முதல்முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்வாகி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரிசையாக வந்து வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்கு இருக்கையில் அமர்ந்தபடியே பதில் வணக்கம் சொன்ன உதயநிதியின் செயல் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. அதன்பின்னர், முதல்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், 2020-21ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பெட்ரோலுக்கான வரி ரூ.3 குறைப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா வகையில், இ-பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வரும் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ-க்களின் இருக்கைகளில் கணினி மூலம் பட்ஜெட்டைப் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கும் முன்பு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். சுமார் 3 மணி நேரம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து முடித்ததும், இன்றைய நாளுக்கான பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. பேரவை நாளை காலை 10 மணியளவில் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
பேரவையில் மூன்றாவது வரிசையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பேரவை தொடங்கியதும் இருக்கைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரிசையாக வந்து வணக்கம் வைத்தனர். பதிலுக்கு அவர் இருக்கையில் அமர்ந்தபடியே வணக்கம் சொன்னது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. பேரவையில் பொதுவாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் சொல்லிக் கொள்வது மரபு. ஆனால், முதல்முறையாக எம்.எல்.ஏவாகி வந்திருக்கும் ஒருவருக்கு மூத்த உறுப்பினர்கள் வரிசையாக வணக்கம் சொன்னதும், உதயநிதி அவர்களுக்கு இருக்கையில் அமர்ந்தபடியே பதில் வணக்கம் சொன்னதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read – TN Budget: தமிழக பட்ஜெட் – பெட்ரோல் வரி ரூ.3 குறைப்பு… முக்கிய அம்சங்கள்!