நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பாராட்டுத் தெரிவித்திருக்கிறது. அந்த விண்கற்களுக்குப் பெயர் சூட்டும் வாய்ப்பையும் தமிழக ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார்கள்.
விண்கற்கள் ஆய்வுப் பயிற்சி
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து செயல்படும் சிக்குரு கெலாப் என்ற நிறுவனம் விண்கற்களின் வகைகளைக் கண்டுபிடிப்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து 23 ஆசிரியர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. நாசாவோடு இணைந்து செயல்படும் டி.ஏ.எஃப்.இ மற்றும் ஹாவாயில் இருக்கும் பென்சீர் பல்கலைக்கழகங்கள் ஆப்பிள் என்ற டெலஸ்கோப் மூலம் இரவு நேரத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்களைப் படமெடுத்து ஆய்வாளர்களுக்கு அனுப்பும். அந்த புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் இடம்பெற்றிருக்கும் விண்கற்களை ஆய்வாளர்கள் வகைப்படுத்துவார்கள்.
அரியலூர் ஆசிரியர்கள்
சிக்குரு கெலாப் நிறுவனம் அளித்த பயிற்சியில் அரியலூர் மாவட்டம் இடையாத்தன்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா, கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிரிஜா ஆகியோர் கடந்த ஜூலை மாதம் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியைகள் இருவரும் பூமியை நோக்கி வரும் 40 நகரும் பொருட்களை இனம் கண்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் இருந்து 18 விண்கற்கள் முதற்கட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டவை விண்கற்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டால் அவற்றுக்கு ஆசிரியர்களே பெயர் வைத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் கவிதா, கிரிஜா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி 2 விண்கற்கள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான பாராட்டுச் சான்றிதழையும் அந்த ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார். அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், சக ஆசிரியர்களும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read – புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டடத்தில் என்ன பிரச்னை… ஒப்பந்ததாரர் யார்?