வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தொடர்பாக தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது?
வடசென்னை அனல் மின் நிலையம்
வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு இருப்பதாக ஆவணங்களில் இருக்கிறது. ஆனால், அனல் மின் நிலையத்தில் இல்லை என்று கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், “நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அதில், வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது. இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி. நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்தார்.
தங்கமணி விளக்கம்
தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், `சூரிய சக்தி மின்சாரம் நின்றுவிட்டால் அனல் மின் நிலையத்தை இயக்க வேண்டும். அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்குவதற்கான நிலக்கரி கணக்கில் வராமல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளின் தகவலை ஏற்றுக்கொள்ளாமல், அனைத்து அனல்மின் நிலைய இயக்குநர்களையும் எச்சரித்தோம். அப்போதே குழு அமைத்து ஆய்வு செய்தோம், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தோம். ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கட்டும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்கிறேன். மடியில் கனமில்லாததால் எனக்குப் பயமில்லை. அ.தி.மு.க ஆட்சியில் கண்டுபிடித்ததை செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறார்’’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து,அ.தி.மு.க ஆட்சியிலேயே கண்டுபிடித்திருந்தால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. யாரைக் காப்பாற்ற முயன்றீர்கள்? தேர்தலுக்கு முன்னதாகவே குழு அமைத்திருந்தால், ஏன் அதன் அறிக்கையை வெளியிடவில்லை’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அதற்கு, அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது. அதையடுத்து, கொடநாடு வழக்கை தமிழக அரசு தூசி தட்டியது. இதற்கு சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பைப் பதிவு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கலைவாணர் அரங்குக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். `நீதிமன்றத்தின் அனுமதியின்றி மறுவிசாரணை நடைபெறுகிறது. கொடநாடு வழக்கில் எனது பெயரைச் சேர்க்க சதி நடக்கிறது’ என்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொதித்தார். இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மனு அளித்தனர். அதேபோல், வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் சில ஆவணங்களை வெளியிட்டது. முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நோக்கில் தி.மு.க அரசு நடந்து வருவதாகவும் அ.தி.மு.க கொதித்து வருகிறது.