முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரவையில் கண்கலங்கிய துரைமுருகன்… ஸ்டாலினின் வாழ்த்தும், ஓ.பி.எஸ்-ன் பாராட்டும்!

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதில், பேசிய ஓ.பி.எஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் துரைமுருகன் பற்றி பல்வேறு சம்பவங்களை நினைவுக்கூர்ந்தனர்.

பொன்விழா காணும் துரைமுருகன்

1971 தேர்தலில் முதல்முறையாக வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் துரைமுருகன் காலடி எடுத்துவைத்தார். அதே தொகுதியில் எட்டு முறையும், ராணிப்பேட்டை தொகுதியில் இரண்டு முறையும் வென்று 10 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர். அவர் சட்டப்பேரவை உறுப்பினராகி ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அவரைப் பாராட்டி சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டப்பேரவை கூடியது. துறைரீதியான மானியக் கோரிக்கை விவாதம் இன்று முதல் நடக்கிறது. முதல்முறையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கையும் அதன் மீதான விவாதமும் நடக்கிறது. மானியக் கோரிக்கைக்கு முன்பாக சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகன் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், அப்படியே வெளிப்படுத்துபவர். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர். நூற்றாண்டு கண்டிருக்கும் சட்டப்பேரவையில் 50 ஆண்டுகாலம் இடம்பெற்றவர்.

மு.க.ஸ்டாலின் - துரைமுருகன்
மு.க.ஸ்டாலின் – துரைமுருகன்

கலைஞரின் அன்பைப் பெற்றவர் துரைமுருகன். அவருக்குப் பக்கத்தில் மட்டுமல்ல, அவரது இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்திருப்பவர். என்னை இளைஞராகப் பார்த்ததாக அண்ணன் துரைமுருகன் குறிப்பிட்டார். அவரை நான் கலைஞர், பேராசியர் அன்பழகன் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். எந்தத் துறையைக் கொடுத்தாலும் முத்திரை பதிப்பவர். சட்டப்பேரவையில் உறுப்பினர்களை அழவைக்க நினைத்தால், அழ வைத்துவிடுவார். உறுப்பினர்களை சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைத்துவிடுவார். பத்து முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்வாகி அமைச்சராகப் பொறுப்பேற்று மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்’’ என்று புகழாரம் சூட்டினார்.

அடுத்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ், “துரைமுருகன் எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களோடும் பாசத்தோடு பழகுபவர். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர். சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் அனைவரது இதயங்களையும் கவர்ந்தவர் துரைமுருகன்; எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர், கருணாநிதியிடத்தில் விசுவாசம் மிக்கவர். சட்டப்பேரவையில் வாதங்கள் வரும்போது சூடாகவும், அடுத்த விநாடியே இனிமையாகவும் பேசும் ஆற்றல் கொண்டவர். ஒரு எம்.எல்.ஏ, எதிர்க்கட்சி உறுப்பினர், அமைச்சராக எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டிருப்பவர்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சமீபத்தில் அ.தி.மு.ககாரர்கள் பற்றி அவர் பேசிய வீடியோ ஒன்றைப் பார்த்து, நானே நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். அந்த வீடியோவில் அண்ணன் துரைமுருகன், `அ.தி.மு.ககாரர்கள் எல்லாரும் ஒரே மாதிரி சட்டையை மடித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள். இதற்காகத் தனியாக பி.ஏ வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை…’ என்று அவர் பேசியதைக் கேட்டு மனம்விட்டு சிரித்தேன்’’என்றார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், `மனிதனுக்கு சுவாசம் கூட நின்றுவிடலாம். ஆனால், விசுவாசம் இல்லாமல் போகக் கூடாது. விசுவாசத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன்’’ என்று பேசினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் பேசுகையில்,அண்ணன் துரைமுருகன் நவரச நாயகன். அவை எந்த சூழலில் இருந்தாலும் அந்த அவையை கலகலப்புக்கு கொண்டுவர வேண்டுமென்று நினைத்தால் அதைக் கொண்டு வருவார்’ என்றார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், `எம்.ஜி.ஆர் – கருணாநிதியைத் தனது இரு கண்களாக நினைத்துப் போற்றியவர். பின்னர், தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது, கலைஞரைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரின் நிழலாக வலம்வந்தவர்’’ என்றார்.

நெகிழ்ந்த துரைமுருகன்

துரைமுருகன் - மு.க.ஸ்டாலின்
துரைமுருகன் – மு.க.ஸ்டாலின்

உறுப்பினர்கள் பாராட்டு மழையில் நனைந்த துரைமுருகன், ஸ்டாலின் பேசுகையில் கண்கலங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “சொற்களும் வரவில்லை, என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. எனது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிபெற்று இருந்தாலும் முத்தாய்ப்பாக அவையில் தீர்மானம் கொண்டுவந்தது நெஞ்சம் நெகிழ்ந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் என் மீது இவ்வளவு வாழ்நாள் முழுவதும் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் ஆற்றுவதைத் தவிர வேறு வேலையில்லை. ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என்று கருணாநிதி சொல்வார். அவர் என்னிடம் காட்டிய பாசத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். கல்லூரியில் முரசொலி செல்வம் என் நண்பனாக இருந்தார். மாணவனாக இருந்தபோதே என்னை நண்பனாக நடத்தியவர் கருணாநிதி. அவர் ஒருமுறைகூட என்னிடம் சாதியைப் பற்றி கேட்கவில்லை. என் தலைவர் அவர்தான்; என் வழிகாட்டி அவர்; எனக்கு எல்லாமுமாக இருந்தவர். அவரது மறைவிற்குப் பின் வெற்றிடம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நீக்கிவிட்டார். தந்தையின் பாசத்தை மிஞ்சும் அளவிற்கு என் மீது பாசத்தைக் காட்டுகிறார் ஸ்டாலின். எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டிருப்பேன்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Also Read – பேரவையில் எதிரொலித்த கொடநாடு வழக்கு…. 2017-ல் என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top