`அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்தின் பெயரைச் சொன்னதுமே முதலில் நம் நினைவுக்கு வருவது ‘குள்ளக் கமல்’ என செல்லமாக அழைக்கப்படும் ‘அப்பு’ கேரக்டரும் கமல் அதை எப்படி சாத்தியாமாக்கியிருப்பார் என்ற ஆச்சர்யமும்தான். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி எந்தவித சிஜி வேலைபாடுகளும் இல்லமால் ஒரு ஹீரோ குள்ள மனிதனாக நடித்து அசத்தியது அந்தவொரு படத்தில் மட்டும்தான். இதன் பின்னணியில் பல டெக்னிக்கல் உழைப்பு இருந்தாலும் கமல் சாதுர்யமாக செய்த ஒரு சிம்பிள் விஷயம்தான் அந்த கேரக்டருக்கு நம்பகத்தன்மையை தந்தது. அது என்ன?
1989-ஆம் ஆண்டு இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலே கதை, திரைக்கதை எழுதி நடித்த படம்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.சி.ஸ்ரீராம். படத்தில் கமலை எப்படி குள்ளமாக காட்டியிருப்பார்கள் என்ற கேள்வி இன்றுவரை கமலையும் ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராமையும் துரத்தி வந்தபோதிலும் இருவருமே இதுதான்.. இப்படித்தான்.. என எதையுமே வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ‘சிதம்பர ரகசியம்’ போல இருந்துவரும் இந்த ‘அ(ப்பு)பூர்வ’ ரகசியத்தை இன்றைய மாடர்ன் சினிமா அறிவுகளைக் கொண்டு ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெரிந்துவருகிறார்கள். ஆனாலும் அதைத்தாண்டி கமல் சிம்பிளாக செய்த ஒரு விஷயத்தைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
முதலில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முறையாகத் தொடங்குவதற்கு முன்பு கமலும் பி.சி.ஸ்ரீராமும் ஒரு டெஸ்ட் ஷூட்டினை ஏற்பாடு செய்தார்கள். அந்த டெஸ்ட் ஷூட்டில் கமல், முட்டி போட்டு கால்களை பின்னால் கட்டிக்கொண்டு சிரமப்பட்டு நடித்தார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதாகவும் நம்பகத்தன்மை மிஸ் ஆவதாகவும் அனைவரும் உணர்ந்தனர். இதுகுறித்து தீவிரமாக யோசித்தபோதுதான் கமலுக்கு ஒரு விஷயம் ஸ்பார்க் ஆகியிருக்கிறது. அதாவது ஒருவர் கால்களை மடக்கிக்கொண்டு நின்றுவிட்டால் மட்டுமே குள்ளமாகத் தெரிந்துவிடமாட்டார். அவரது கைகள் உண்மையான உயரத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்பதே அது. அதன்பிறகு கமல் தன் கைகளை பாக்கெட்களில் விட்டுக்கொண்டு நடித்துப் பார்த்தார். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்த்த நம்பகத்தன்மை கிடைத்தது.
சரி, படம் முழுக்க இப்படி பாக்கெட்களில் கைகளை வைத்துக்கொண்டு நடிக்கமுடியாதே என யோசித்தபோதுதான் இன்னொரு விஷயம் கமலுக்கு ஸ்பார்க் ஆகியிருக்கிறது. கைகளில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொண்டிருப்பது என்பதுதான் அது. நீங்கள் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு வரும் காட்சிகள் அனைத்தையும் கவனித்தீர்கள் என்றால் கமல் தன் கைகளில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொண்டோ அல்லது பாக்கெட்களில் கைகளை வைத்துக்கொண்டோதான் நடித்திருப்பார். வெறுமனே அவரது கைகள் தொங்கிக்கொண்டிருக்காது. இந்த ஐடியாவுக்குப் பிறகுதான் படக்குழு தைரியமாக படத்தின் மேஜர் ஷூட்டிங்கைத் தொடங்கினார்கள்.
இவையல்லாமல் பி.சி.ஸ்ரீராம் தரப்பிலிருந்தும் சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக எல்லாக் காட்சிகளிலுமே கமல் கால்களை பின்னால் கட்டிக்கொண்டு சிரமப்பட்டு நடிப்பது தவிர்க்கப்பட்டது. ‘அப்பு’ கமல் இருக்கும் இடத்தில் பள்ளம் தோண்டி அதன் உள்ளே கமலின் பாதி உடலை மறைத்து, நடந்துகொண்டே பேசி நடிக்கப்போகிறார் என்றால் அதற்கேற்ப பள்ளத்தையும் அகலப்படுத்திக்கொண்டு மேலும் ரசிகர்களின் கவனம் பள்ளத்தை நோக்கி போகாதவாறு கோணம் அமைத்தும் லைட்டிங் செய்தும் படம் பிடித்தார் பி.சி.ஸ்ரீராம். மேலும் தான் பள்ளத்துக்குள் நடக்கிறோம் என்பது தெரியாதவகையில் அதற்கேற்ப தனது உடல் மொழியை வெளிப்படுத்தி நடித்து அசத்தியிருப்பார் கமல்.
ஆண்டவர்னா சும்மாவா!!
Also Read – தெருக்குரல் அறிவு எங்கே… அமெரிக்க இதழின் சர்ச்சையான அட்டைப்படம் – பின்னணி என்ன?