OLX விளம்பரங்களைப் பார்த்து புல்லட் பைக்கை வாங்குவதுபோல் திருடுவதை வழக்கமாக வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த 29 வயது பட்டதாரி இளைஞர் முகமது நிஹால் என்பவரை சென்னை அமைந்தகரை போலீஸார் கைது செய்தனர்.
OLX விளம்பரம்
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்டர் என்பவர், தன்னிடமிருந்த புல்லட் பைக்கை விற்பதற்காக OLX-ல் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்து விக்டரைத் தொடர்புகொண்ட ஒரு நபர், பைக்கை வாங்க ஆர்வம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அமைந்தகரை கோவிந்தா தெரு அருகில் இருக்கும் கடை ஒன்றில் நிற்பதாகவும் பைக்கைப் பார்க்க வேண்டும் என்றும் விக்டரிடம் அவர் கூறியிருக்கிறார். புல்லட்டை கடந்த 22-ம் தேதி மாலையில் நேரில் வந்து பார்த்த அந்த நபர், புல்லட்டை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய அந்த நபரின் தோற்றத்தைப் பார்த்து அவரை நம்பிய விக்டர், புல்லட்டைக் கொடுத்திருக்கிறார். புல்லட்டை ஓட்டிச் சென்ற அந்த நபர் திரும்ப வரவேயில்லை. இதனால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்டர், அமைந்தகரை போலீஸில் புகார் செய்தார்.
கேரள புல்லட் திருடன்
இந்த விவகாரத்தில் புல்லட் திருடன் பயன்படுத்திய செல்போனின் IMEI நம்பரை வைத்து அவரை போலீஸார் டிரேஸ் செய்திருக்கிறார்கள். நொளம்பாக்கம் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்த நபரை சுற்றிவளைத்துக் கைது செய்த அமைந்தகரை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில், அந்த நபரின் பெயர் முகமது நிஹால் என்பதும், கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
எம்.சி.ஏ பட்டதாரியான நிஹால், கேரளாவில் OLX விளம்பரம் மூலம் புல்லட் விற்பனை செய்பவரைக் குறிவைத்து, வாங்குவது போல நடித்து அதைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்கிறார்கள் போலீஸார். அதன்பிறகு, அதே OLX-ல் திருட்டு புல்லட்டைக் குறைந்த விலைக்கு விற்று விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். இடையில், துபாயில் வேலை கிடைத்து சென்றிருக்கிறார். பின்னர், இந்தியா திரும்பிய நிஹால், சென்னையில் கைவரிசை காட்டியபோது சிக்கியிருக்கிறார். ஒவ்வொரு திருட்டுக்கும் ஒரு செல்போன் நம்பரைப் பயன்படுத்துவதும், அது முடிந்தபிறகு சிம் கார்டை உடைத்தெறிவதும் நிஹாலின் வழக்கம் என்கிறார்கள் போலீஸார். IMEI நம்பர் மூலம் டிரேஸ் செய்யப்பட்டு போலீஸில் சிக்கிய முகமது நிஹால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.