திருச்சி மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவன் சீனிவாசன், சட்டப்பேரவையில் தனது கன்னிப்பேச்சில் தொகுதி மக்களுக்காக பல்வேறு துறை சார்ந்த 11 கோரிக்கைகளை முன்வைத்து கவனம் ஈர்த்தார்.
கதிரவன் சீனிவாசன்
கடந்த 2008 தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டது மண்ணச்சநல்லூர் தொகுதி. 2011, 2016 என இரண்டு முறை அ.தி.மு.க வென்றிருந்த இந்தத் தொகுதியில் 2021 தேர்தலில் தி.மு.க சார்பில் களம்கண்டவர் எஸ்.கதிரவன். திருச்சி சுற்றுவட்டாரங்களில் கல்வி, மருத்துவசேவையில் ஈடுபட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவரான சீனிவாசனின் மகனான எஸ்.கதிரவன், இந்தத் தொகுதிக்குட்பட்ட பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர். தேர்தலில் சுமார் 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரைத் தோற்கடித்து முதல்முறையாக எம்.எல்.ஏ-வானார். பத்தாண்டுகள் அ.தி.மு.க வசமிருந்த மண்ணச்சநல்லூர் தொகுதியில் இவர் வெற்றிபெற்ற வாக்குவித்தியாசம் கடந்த தேர்தலில் அதிக வாக்குவித்தியாச பட்டியலில் தமிழகத்தில் முதல் 10 இடங்களுக்குள் ஒன்று. தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே தொகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.
எஸ்.கதிரவன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 11.50 லட்ச ரூபாய் செலவில் நூலகம், கம்ப்யூட்டர் லேப் வசதி செய்து கொடுத்திருக்கிறார். மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ பெரிதாக வெளியே தலைகாட்டாத நிலையில், சொந்த நிதியில் பெரம்பலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, மளிகைப் பொருட்கள், பிரெட் வழங்கியவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவரது பணியை மாற்றுக்கட்சியினரும் பாராட்டியிருக்கிறார்கள். இவரது மக்கள் பணியைப் பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் என்பவர் மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியதோடு, நேரிலும் பாராட்டுகளைத் தெரிவித்தது கட்சிகளைக் கடந்து நெகிழவைத்த சம்பவம்.
சட்டப்பேரவையில் கன்னிப்பேச்சு!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (13-09-2021) பேரவையில் தனது முதல் பேச்சைப் பதிவு செய்தார் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ எஸ்.கதிரவன். தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளைத் தனது கன்னிப்பேச்சில் பேரவையில் வலியுறுத்திப் பேசினார். அவர் பேசுகையில், “மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒருங்கிணைத்து மண்ணச்சநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், சாலை, சமயபுரம் கோயிலில் அடிப்படை வசதிகள், குடிநீர், போக்குவரத்து, சாலை வசதிகள் என தொகுதி மக்கள் சார்பாக பல்வேறு துறைகள் சார்ந்த முக்கியமான 11 கோரிக்கைகளை அந்தந்த அமைச்சர்கள் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக, தனது பேச்சைத் தொடங்குகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நினைவுகூர்ந்ததோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் பேசினார். பேரவையில் கன்னிப்பேச்சின்போது எதிர்க்கட்சித் தலைவரையும் குறிப்பிட்டு மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ எஸ்.கதிரவன் தனது பேச்சைத் தொடங்கியது பாராட்டுகளைப் பெற்றது.