மானாமதுரை அருகே நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் – நிர்வாகி ஒருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகி பாண்டிவேலுவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் என்ன நடந்தது?
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட் நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அப்போது பேசிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு, `மாவட்டத்தில் நம் கட்சி வளர்ச்சியடையாமல் இருக்கக் காரணம் இப்போதிருக்கும் நிர்வாகிகள்தான். இவர்களை மாற்றாமல் நம்மால் கட்சியை வளர்ச்சிபெறச் செய்ய முடியாது. பதவியில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியின் உண்மையான தொண்டர்களைக் கூட்டத்துக்குக் கூட அழைப்பதில்லை. பூத் கமிட்டியைக் கூட ஒழுங்காக அமைக்கவில்லை’’ என்று பேசினார்.
கோபமான ப.சிதம்பரம்!
அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் இடைமறித்த நிர்வாகிகள் சிலர், அவரைப் பேசவிடாமல் தடுக்க முயற்சித்தனர். இதனால், சமாதானமாகாத பாண்டி வேலு தொடர்ந்து ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இதனால், கோபமான ப.சிதம்பரம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். பாண்டி வேலு அருகில் சென்ற அவர், நீங்கள் மேடையிலிருக்கும் எனது சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்கள் சேரில் கீழே அமர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லியதாகத் தெரிகிறது. இதனால், ஆவசேமடைந்த பாண்டி வேலு ப.சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் புயலைக் கிளப்பியது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாண்டிவேலு,என்னைப் பேசக்கூடாது என ப.சிதம்பரம் சொன்னதால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து சோனியா, ராகுலிடம் புகார் கொடுக்க இருக்கிறேன்’ என்றார்.
கட்சிப் பதவி பறிப்பு!
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து பாண்டி வேலு நீக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அறிவித்திருக்கிறார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் பாண்டி வேலு நீக்கப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு சிவகங்கை காங்கிரஸ் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருகிறது. அந்த நோட்டீஸில், கூட்டத்தில் மற்றவர்களைப் பேசவிடாமல் இடையூறு செய்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதுபற்றி விளக்கமளிக்கத் தவறும்பட்சத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள் என்றும் பாண்டி வேலுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.