தமிழகத்தில் முதல்முறையாக முன்னணி விமான நிறுவனமான போயிங் நிறுவனத்தின் உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்க சேலத்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்
சேலத்தில் கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இது படிப்படியாக வளர்ந்து சிறு நிறுவனமாகவும், தற்போது நடுத்தர நிறுவனமாகவும் உயர்ந்திருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனம் விண்வெளி, பாதுகாப்புத் துறையில் பாகங்களைத் தயாரித்து வருகிறது.
`ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அடுத்த 24 மாதங்களில் ரூ.150 கோடி முதலீட்டில் ஓசூரில் 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டட தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியைத் தொடங்க இருக்கிறது. அதேபோல், சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் வசதி 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த சாதனை தமிழ்நாடு முதல்வரின் தொலைநோக்கு பார்வையான, “தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது” (Made in Tamil Nadu) என்பதின் ஒரு படியாக அமையும்’ என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் ஒப்பந்தம்
சேலத்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாசாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடையேயான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இதற்கான ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவன அதிகாரி அஷ்வனி பார்கவாவிடமிருந்து ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுந்தரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
Also Read – வாடிக்கையாளர்களே உஷார் – அக்டோபர் 1 முதல் காலாவதியாகும் 3 வங்கிகளின் காசோலைகள்!