IPL 2022 தொடரில் பங்கேற்கும் லக்னோ, லக்னோ அணிகளுக்கான ஏலத் தொகை முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி வென்ச்ர்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூ.7,090 கோடிக்கும், ஐரேலியா நிறுவனம் அகமதாபாத்அணியை ரூ.5,625 கோடிக்கும் வாங்கியிருக்கின்றன. 2022 ஐபிஎல் தொடரில் இதன்மூலம் 10 அணிகள் விளையாடும். இதனால், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.
IPL 2022
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருக்கும் 8 அணிகளோடு லக்னோ, அகமதாபாத் அணிகளையும் சேர்த்து 10 அணிகள் 2022 ஐபிஎல் தொடரில் விளையாடும். இதனால், தற்போது இருக்கும் 60 போட்டிகளுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு தொடர் 74 போட்டிகள் கொண்டதாக இருக்கும். அதேபோல், 10 அணிகளையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் அணி, தங்களது பிரிவில் இருக்கும் மற்ற 4 அணிகளோடு தலா இரண்டு போட்டிகளில் (8 போட்டிகள்) விளையாட வேண்டும். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டாலும், எல்லா அணிகளும் புள்ளிகளின் அடிப்படையில் ஒரே புள்ளிப் பட்டியலில்தான் இடம்பெற்றிருக்கும்.
ஒவ்வொரு அணியும் சொந்த மைதானங்களில் 7 போட்டிகள், மற்ற அணிகளின் மைதானங்களில் 7 போட்டிகள் என இப்போது இருப்பதைப் போலவே 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதேபோல், இரண்டு பிரிவுகளில் இருக்கும் அணிகள், அந்த அணிகள் மற்ற பிரிவில் இருக்கும் அணிகளோடு மோதும் வகையில், குலுக்கல் முறையில் அணிகளையும் இடங்களையும் தேர்வு செய்வார்கள்.
வீரர்கள் ஏலம்
ஐபிஎல் 2022-க்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தரப்பில் இதுவரை இறுதி அறிவிப்பு வெளிவரவில்லை. அதேநேரம், அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில், 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என்ற காம்பினேஷனை பிசிசிஐ இறுதி செய்யும் என்று தெரிகிறது.
புதிய அணிகளை வாங்கியிருக்கும் இரண்டு நிறுவனங்களும் ஏலத்துக்குப் பிந்தைய நடைமுறைகளை முடிக்கும்பட்சத்தில், ஏலத்தில் மற்ற அணிகளைப் போலவே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அணிகளைப் போலவே இவர்களுக்கும் ஏலத்துக்கு முன்னதாகவே 4 வீரர்களை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.