கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருக்கிறது. அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். என்ன நடந்தது?
கோயில் நகைகள்
கோயில்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டது. இதுதொடர்பாக அந்தத் துறை தரப்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க, இந்து அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்ட் என்ற அமைப்பு, ரமேஷ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு விளக்கம்
அப்போது, கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும் கோயில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகள்தான் தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 11 ஆண்டுகளாக கோயில் தங்க நகைகள் கணக்கெடுக்கப்படாமல் இருப்பதாகவும், இதற்காக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என இருவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் முடியும் வரை தங்க நகைகளை உருக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோயில் நகைகள் குறித்த கணக்கெடுப்பு மட்டுமே தற்போது நடந்து வருவதாகவும், அறங்காவலர் நியமனம் முடியும் வரை நகைகள் உருக்கப்படாது என்று தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. மேலும், ஏற்கனவே நகைகளை உருக்கி வங்கிகளில் வைப்பு வைக்கப்பட்டதில் இருந்து ரூ.11.5 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்ததாகவும், அது கோயில் நலனுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறித்துக் கொண்ட நீதிபதிகள், அறங்காவலர் குழு நியமனம் முடியும் வரையில் கோயில் நகைகளை உருக்கத் தடை விதித்தனர். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.