`வாலிபக் கவிஞர்’ வாலி ஒருபுறம் தனது 81 வயதுவரை எத்தனையோ ஆயிரம் கவிமிகுப் பாடல்களை எழுதியிருக்க, இன்னொருபுறம் சில தனித்துவமான கேமியோ ரோல்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அவ்வாறு அவர் நடித்த கேமியோ ரோல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
பொய்க்கால் குதிரை
கவிஞர் வாலியை நடிகராக மாற்றிய பெருமை இயக்குநர் கே.பாலச்சந்தரையேச் சேரும். 1983 –இல் அவர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரை’ படத்தில்தான் வாலிக்கு முதல் நடிப்பு அனுபவம். ஆனால் அதிலொரு தேர்ந்த நடிகர்போல நடித்து சிரிக்கவைத்திருப்பார் வாலி. சலூன் கடைக்கு முடி வெட்டப்போய் வாலி பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் அந்தக் காட்சி ஒன்றே போதும் அவர் நடிப்புத் திறமையைப் பற்றி பேச.
பார்த்தாலே பரவசம்
தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அவர் நடித்தப் படம் ‘பார்த்தாலே பரவசம்’. இந்தப் படத்தில் விவேக்குடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி காட்சிகளான.. விவேக்குக்கு மலையாளம் சொல்லித் தருவது, ஒரு பெரிய வி.ஐ.பியை தனது முன்னாள் காதலி என வாலி சொல்லி விவேக்கை திகைக்க வைப்பது என அந்தக் காமெடி காட்சிகள் எல்லாமே இன்றும் மிகப் பிரபலம்.
ஹேராம்
2000 –ஆம் ஆண்டு கமல் முதன்முதலாக எழுதி இயக்கிய ‘ஹேராம்’ படத்திலும் வாலி நடித்திருப்பார். கமலுக்கு தாய் மாமன் வேடமான ‘பாஷ்யம் ஐயங்கார்’ கதாப்பாத்திரத்தில் பார்ப்பணத் தமிழ் பேசி நடித்து அசத்தியிருப்பார் வாலி. கூடுதலாக இந்தப் படத்தில், தொழில்முறை நடிகர்களே சற்றுத் தடுமாறும் லைவ் டப்பிங் காட்சிகளில் அசால்டாக நடித்து கலக்கியிருப்பார் வாலி.
காதல் வைரஸ்
இயக்குநர் கதிர், தான் மிகவும் நேசிக்கும் கவிஞர் வாலியை, தனது ‘காதல் வைரஸ்’ படத்தில் கவிஞர் வாலியாகவே ஒரு காட்சியில் நடிக்கவைத்து அழகு பார்த்திருப்பார்.
சத்யா
1988 –இல் வெளியான இந்தப் படத்தில் வாலிக்கு சற்று வில்லத்தனமான வேடம். அதாவது படத்தில் வரும் வில்லனின் கூட இருக்கும் ஆளாக நடித்திருப்பார் வாலி.போதாக்குறைக்கு அந்தப் படத்தில் ‘நகரு.. நகரு..’ என்ற பாடலில் கவர்ச்சியாக ஆடும் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளுவிடும் குறும்பு ஆசாமியாகவும் நடித்திருப்பார் வாலி.
இதுபோக பாலசந்தர் இயக்கத்தில் ‘கையளவு மனசு’, ‘இம்சை அரசிகள்’, ‘அமுதா ஓர் ஆச்சர்யக்குறி’ உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களிலும் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறார் கவிஞர் வாலி.
Also Read : IFS தேர்வில் சாதித்த திவ்யா – முதல் முயற்சியிலேயே தமிழகத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி!