வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றியிருந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கின் பின்னணி என்ன?
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% வழங்க தமிழக அரசு கடந்த பிப்ரவரி 26-ல் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டத்துக்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினசரி இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. உள் ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பா.ம.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு வாதிட்டு வந்தார். அரசு தரப்பில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என்று வாதிடப்பட்டது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிட்டவர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்காமல் எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும். எம்பிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் 68 சாதிகள் கொண்ட சீர்மரபினருக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால், எம்பிசி-யில் உள்ள 22 சாதியினருக்கு வெறும் 2.5% உள் ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். எனவே, எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கிடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 25 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த வழக்கில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், `மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என்ற வாதம் கற்பனையே. அரசியல் சட்டத்தைப் பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்கியது தவறானது எனவும் குறிப்பிட்டனர். மேலும், மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் தீர்ப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என வழக்கறிஞர் பாலு கோரிக்கை வைத்தார். மேலும், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகள் ஒதுக்கீடுகளைப் பெற்றுவிட்டதாகவும், இந்தத் தீர்ப்பு கடைபிடிக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில் 10.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டிருப்பதாகக் கூறினர். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்யப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.
Also Read – 2ஜி விவகாரத்தில் மன்னிப்புக் கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்… பின்னணி என்ன?