புதிய அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார் ஜோ பைடன். முதல் நாளே 17 ஃபைல்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபரும் முதல் நாளில் இத்தனை கையெழுத்து போட்டதில்லை. கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன். பெரும்பாலும் ட்ரம்பின் பல்வேறு கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய கையெழுத்துகள்.
நாம் இப்போது பார்க்கப்போவது அந்த ஃபைலில் இருந்த விஷயங்களை அல்ல. பைடன் கையெழுத்துப்போட பயன்படுத்திய பேனாவைப் பற்றி.
பைடனின் மேஜையில் அவர் கையெழுத்திட வேண்டிய ஃபைல்களுக்கு அருகில் நிறைய பேனாக்கள் வைக்கப்பட்டிருந்தது. பைடன் ஒவ்வொரு ஃபைலிலும் ஒவ்வொரு பேனாவில் கையெழுத்திட்டார். அது ஏன்? என்று பார்ப்பதற்கு முன் அந்தப் பேனாவைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பேனாக்களை தயாரித்தது க்ராஸ் எனும் நிறுவனம். 1970 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிபர்களுக்கான பேனாக்களை தயாரித்து வழங்குவது க்ராஸ் நிறுவனம்தான். 1846-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 175 வருடங்களாக பேனா தயாரித்து வருகிறது.
பைடன் பயன்படுத்தியது 23 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட Cross Century II Rollerball பேனா. பொதுவாக இந்த வகை பேனா ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 7500 ரூபாய். ஆனால் பைடன் பயன்படுத்திய பேனாக்களில் சில எக்ஸ்ட்ரா விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பைடன் பயன்படுத்தும் ஒவ்வொரு பேனாவிலும் அவருடைய கையெழுத்தின் மாதிரியும் அமெரிக்கா அதிபரின் முத்திரையும் இருக்கும்.
அமெரிக்கா அதிபர்களுக்கென்ற ஒரு நடைமுறை உள்ளது. ஒரு மசோதாவில் கையெழுத்திடும்போது கையெழுத்திடப் பயன்படுத்திய பேனாவை ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் அந்த மசோதாவை உருவாக்கியவர், அந்த மசோதாவுக்காக போராடியவர் இப்படி யாருக்காவது கொடுப்பது வழக்கம்.
2010 ல் முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்த் கேர் திட்டத்தில் கையெழுத்திட அப்போதைய அதிபர் ஒபாமா 22 பேனாக்களை பயன்படுத்தினார். 1964-ல் சிவில் உரிமைகள் சட்டம் கொண்டு வந்தபோது அன்றைய அதிபர் லிண்டன் ஜான்சன் 75 பேனாக்களை பயன்படுத்தி கையெழுத்திட்டார். இதுதான் உள்ளதிலேயே அதிகம். காரணம் ஒரு பேனாவில் கையெழுத்திட்டால் ஒருவருக்குதான் பரிசளிக்க முடியும். அதிகமான பேனாக்கள் என்றால் அதிக பேருக்கு Thank you Gift ஆக கொடுக்க முடியும்.
துபாயில் ஒரு முறை டீ குடித்த க்ளாஸில் மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என்று வடிவேலு சொல்வதைப் போல. அமெரிக்க அதிபர்கள் ஒரு முறை கையெழுத்திட்ட பேனாவை மீண்டும் பயன்படுத்த மட்டார்கள்போல.
[zombify_post]