திருவள்ளூர் மாவட்டம் சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் திடீரென ஏற்பட்ட 10 அடிப் பள்ளம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் கொசஸ்தலையாறு, கூவம், ஆரணியாறு, பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மழை குறைந்தும் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சொரக்காய்பேட்டை அரசுப் பள்ளி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலையாற்றை ஒட்டி சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் பள்ளியைக் கடந்த வாரம் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில், பள்ளியின் சுற்றுச்சுவர், மரங்கள், மின்கம்பங்கள் போன்றவை பாதிக்கப்பட்டன. இதனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறைக்குப் பின்னர் பள்ளி வழக்கம்போல் நேற்று திறக்கப்பட்டது. அப்போது, பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. வகுப்புக்குள் சென்று இதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டடத்தின் அடிப்பகுதியில் இருந்த மணல் பெருமளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தாசில்தார், ஆற்று வெள்ளம் பள்ளிக்குள் வராமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கிவைக்க உத்தரவிட்டார். மேலும், கட்டடத்தை சீரமைத்து அதன் உறுதித் தன்மை பரிசோதிக்கப்படும்வரை மாணவர்களை அந்தக் கட்டடத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர். மாணவர்கள் விடுமுறையில் இருக்கும் சமயத்தில் பள்ளம் ஏற்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Also Read : Chennai Rains: 2021 நவம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கப்போகிறதா… வானிலை நிலவரம் சொல்வதென்ன?