‘ஜெய்பீம்’. அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இந்த சொல், கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவிலும் மிகப்பெரும் பேசுபொருளாக இருந்துவருகிறது. ‘ஜெய்பீம்’ படத்தைச் சுற்றி ஆதரவுகளும் சர்ச்சைகளும் மிகப்பெரிய அளவில் குவிந்துவரும் நிலையில், இதுபோன்று முன்னதாக தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குள்ளான படங்களைப் பற்றிய ஒரு ரீவைண்ட்
விஸ்வரூபம் (2013)
இப்போது உலகமே பேசும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசியலை அப்போதே கமல் ‘விஸ்வரூபம்’ படத்தில் மிக நுட்பமாகப் பேசியிருப்பார். ஆனால், கமல் இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முயற்சி செய்தபோது வெடித்த சர்ச்சை, இஸ்லாமியர்களின் எதிர்ப்பு, தமிழகத்தில் மட்டும் தாமதமான ரிலீஸ் என மிகப்பெரும் தொடர் சர்ச்சைகளை சந்தித்தது.
இனம் (2014)
ஈழப்போரின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம், தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்கிறது என சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் விளைவாக படம் வெளியான நான்கே நாட்களில் தியேட்டர்களில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி.
இருவர் (1997)
இருபெரும் திராவிடத் தலைவர்களான கலைஞர், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு, மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் படத்தின் இயக்குநரான மணிரத்னம் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்து பரபரப்பானது.
கத்தி (2014)
படத்தைத் தயாரித்த ‘லைக்கா’ நிறுவனமானது இலங்கையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்பதால் ‘கத்தி’ படத்தைத் தமிழ்நாட்டுக்குள் வெளியிடக்கூடாது என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும் கத்திப் படத்தின் கதை என்னுடையது என இயக்குநர் கோபி நாயினார் கிளப்பிய சர்ச்சை, விஜய் பேசிய 2ஜி வழக்கு பற்றிய வசனம் என அடுத்தடுத்து இந்தப் படத்தை சர்ச்சைகள் சூழ்ந்தது.
நடுநிசி நாய்கள் (2011)
இயக்குநர் கௌதம் மேனன் தன் ரூட்டை மாற்றி வித்தியாசமாக எடுத்த இந்தப் படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. படத்தில் மனநலம் பாதிக்கபட்ட ஹீரோ, தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்படி அமைக்கப்பட்ட காட்சிகளே இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். சில கலாச்சார காவலர்களும், மகளிர் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கவே சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
மெர்சல் (2017)
‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி பற்றியும் பொருளாதாரச் சரிவையும் பற்றியும் விஜய் & வடிவேலு பேசியிருந்த வசனங்கள் மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.கவின் எதிர்ப்புக்கு உள்ளானது. விளைவு ‘மெர்சல்’ படத்தின் வீச்சு டெல்லிவரை சென்று அங்கும் பேசப்பட்டது.
துள்ளுவதோ இளமை (2002)
இயக்குநர் செல்வராகவனின் அதிகாரப்பூர்வமற்ற முதல்படமான இந்தப் படத்தில் அவர், டீன் ஏஜ் உலகத்தை பூசல்கள் இல்லாமல் அப்படியே பதிவு செய்துவிட அது ஏராளமான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் சந்தித்தது.
சர்க்கார் (2018)
கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கி ‘சர்க்கார்’ படம் ஒரு வழியாக மீண்ட நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த.. அரசு இலவசப் பொருட்களை தீயில் எறியும் காட்சிகளும் குறியீடுகளும் அப்போதைய அதிமுக அரசை எரிச்சலூட்டியது. விளைவு படம் வெளியான திரையரங்குகளில் அடுத்த சில நாட்கள் பதட்ட நிலைதான்.
விருமாண்டி (2001)
படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டிலான ‘சண்டியர்’ என்பது ஒரு இனத்தைக் குறிப்பதாக சொல்லி புதிய தமிழகம் கட்சியினரும், அனைவரும் அரிவாளுடன் இருக்கும் படத்தின் போஸ்டருக்கு விடுதலை சிறுத்தைக் கட்சியினராலும் எதிர்ப்புகள் வலுத்தது. ஆனால் பின்னாளில் அதே ‘சண்டியர்’ எனும் டைட்டிலில் வேறொரு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவா (2013)
‘Time to lead’ இந்த கேப்ஷனுடன் படத்தின் டைட்டில் வெளியாக, இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதன் விளைவாக ஆளும்கட்சித் தரப்பினரின் அழுத்தத்தாலும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்சத்தினாலும் தமிழகத்தில் மட்டும் 11 நாட்கள் தாமதமாக தலைவா படம் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்தது
இவற்றுள் எந்தப் படத்தின் சர்ச்சைகள் தேவையற்றது என நீங்கள் நினைக்கிறீர்கள் என கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Also Read – கமலும் விஜயகாந்தும் ஒரே படத்துல… இதை நீங்கப் பார்த்திருக்கீங்களா?