கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிளான `பண்டாரத்தி புராணம்’ மனைவியைப் பிரிந்த கணவன், அவளின் நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் உருவாகியிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜீஷா விஜயன், லால், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 9-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் கர்ணன் படத்தின் முதல் பாடலான
கண்டா வரச் சொல்லுங்க… கர்ணனை கையோடு கூட்டு வாருங்க..’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் வசீகரக் குரலில் ரசிகர்களை அந்தப் பாடல் கட்டிப்போட்டது. அந்த வரிசையில் இரண்டாவது பாடலாக `பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது.
பண்டாரத்தி புராணம்
பொதுவாக கிராமப்புறங்களில் தெருக்கூத்து தொடங்குவதற்கு முன்பாக அந்தக் கதையின் மாந்தர்களை பாடல்கள் வாயிலாக அறிமுகப்படுத்தும் வழக்கம் உண்டு. அந்தவகையில், படத்தின் நாயகன் கர்ணனை அழைக்கும் பொருட்டு முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. கர்ணன் அழைப்பு என்றே பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், படத்தின் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் இந்தப் பாடல் வெளியாகியிருக்கிறது.
கவிஞர் யுகபாரதியின் வரிகளில் தேனிசைத் தென்றல்’ தேவாவின் கணீர் குரலில் நாட்டுப்புற பாடலாக ஒலிக்கும் ஏன் ஆளு பண்டாரத்தி எனத் தொடங்கும்
பண்டாரத்தி புராணம்’ ஏமராஜா – பண்டாரத்தி தம்பதியின் வாழ்க்கையைப் பேசுகிறது. கக்கத்துல வைச்ச துண்டை… தோளுமேல ஏத்திவிட்டா என சாதிய அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டும் இந்தப் பாடல், தனது மனைவி ஏ.பண்டாரத்தியின் மறைவுக்குப் பிறகான சூழலில் ஏமராஜா கதாபாத்திரம் பாடுவதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
ஏமராஜா – பண்டாரத்தியின் காதலைப் பற்றியும் பேசும் இந்தப் பாடல்…“கக்குளத்து பக்கத்துல காலசாமி கோயிலில சாதியைத்தான் பலிகொடுத்து சந்தனம், குங்குமம் பூசிக்கிட்டோம்’’ என சாதிமறுப்புத் திருமணத்தையும் குறிப்பிடுகிறது. பின்னர், காலராவுக்குத் தன் மனைவியைப் பலிகொடுத்ததாக ஏமராஜா பாடுவது போன்ற சூழலில் தேவாவின் குரல், மனைவியை இழந்த கணவனின் வலியை நமக்குக் கடத்துகிறது. ஏமராஜாவாக லால் நடித்திருக்கிறார்.
லிரிக் வீடியோவாக வெளியானாலும் படத்தின் சில காட்சிகளையும் சேர்த்தே பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். லால் பாடல் பாடும் காட்சிகள், தனுஷின் நடனம், ஹீரோயின் ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதை மாந்தர்களையும் இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு இந்தப் பாடலின் வாயிலாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த இயக்குநர் மாரி செல்வராஜ், `ஏமராஜா கதற கர்ணன் தாண்டவமாடும் பண்டாரத்தி புராணம் இன்று மாலை’ என்று பதிவிட்டிருந்தார்.