தே.மு.தி.க நிறுவனத் தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் – பிரேமலதா தம்பதிக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் சண்முகபாண்டியன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சகாப்தம், மதுரை வீரன் என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதில்லை. மூத்த மகன் விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகம் தென்படத் தொடங்கியிருக்கிறார்.
யார் இந்த விஜயபிரபாகரன்?
கட்டடக் கலைப் படித்திருக்கும் விஜயபிரபாகரன் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதற்காகவே `The WONES KENNELS’ என்ற பெயரில் தனி நிறுவனமே நடத்தி வருகிறார். நாட்டு நாய்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு நாய்கள் பலவும் இவரிடமிருக்கின்றன. உலக அளவில் நடைபெறும் நாய்கள் கண்காட்சிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் அடித்திருக்கின்றன இவரது வளர்ப்பு நாய்கள். சிறுவயது முதலே நாய்கள் மீது தனி ஈடுபாடு இருந்ததாகவும், ஒருநாள் நாய்கள் கண்காட்சி குறித்து கேள்விப்பட்டு என்னதான் செய்கிறார்கள் என்ற ஆர்வத்தில் தேடத் தொடங்கியதாகவும் விஜயபிரபாகரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின்னர், நாய்கள் கண்காட்சிகளில் கலந்துகொள்வதற்காகவே பிரத்யேகமாக வெளிநாட்டு நாய் இனங்களை விலைக்கு வாங்கி அவற்றுக்குத் தனி கவனம் செலுத்தி வளர்த்து வருகிறார் விஜயபிரபாகரன்.

பேட்மிண்டன் கிளப்
இந்திய பேட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்று விளையாடிய சென்னை ஸ்மாஷர்ஸ் அணியைக் கடந்த 2016ல் வாங்கி விளையாட்டுத் துறையில் கால்பதித்தார் விஜயபிரபாகரன். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்த அணிக்காக விளையாடியவர். அதைத் தாண்டி விஜய பிரபாகரனும் பி.வி.சிந்துவும் நல்ல நண்பர்கள். விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு வசனத்தை பி.வி.சிந்துவும் விஜய பிரபாகரனும் டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலானது. 2016 முதல் 2019 சீசன் வரை சென்னை ஸ்மாஷர்ஸ் அணியை விஜயபிரபாகரன் வைத்திருந்தார். பி.வி.சிந்து தலைமையில் அந்த அணி 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் அரசியல் மேடை

2018ம் ஆண்டுக்கு முன்னர் தேமுதிக சார்பில் நடந்த பெரும்பாலான அரசியல் மேடைகளில் விஜய பிரபாகரன் தலைகாட்டியதில்லை. விஜயகாந்துக்கு உடல் நலன் குன்றி அவர் வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் விஜயபிரபாகரன் அரசியல் மேடைகளில் தென்படத் தொடங்கினார்.
அந்தக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக இருக்கும் அனகை முருகேசன் முதன்முறையாக விஜயபிரபாகரனை மேடையேற்றினார். அவரது சொந்த ஊரான அனகாபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக விஜயபிரபாகரனை வரவழைத்து, முதல்முறையாக அரசியல் பேசவைத்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், நான் தீவிர அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறேன். கட்சியின் இளைஞரணியில் எனக்குப் பெரிய பொறுப்புக் கொடுக்கப் போவதாக ஒரு வதந்தி இருக்கிறது. ஆனால், அரசியல் என்பது கட்சிப் பொறுப்புகளுக்குப் பின்னால் போவதல்ல. பொதுமக்கள் நலனுக்காகவும் கட்சியின் வளர்ச்சிக்காவும் என்னிடம் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை அப்பாவின் ஆசியுடன் நான் செயல்படுத்துவேன். அப்பாவின் பாதையை நான் பின்பற்றுவேன்’’ என்று பேசியிருந்தார். அந்தக் கூட்டத்தில்
துணை கேப்டன்’ என விஜயபிரபாகரைத் தொண்டர்கள் விளித்தனர்.
அக்டோபர் 6, 2018ல் நடந்த அந்த நிகழ்ச்சி குறித்து பின்னாட்களில் நினைவுகூர்ந்த விஜயபிரபாகரன், `அப்பா (விஜயகாந்த்) அமெரிக்காவுல ட்ரீட்மெண்ட்ல இருந்ததால சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்படி கட்சியினர் என்னை அழைத்தார்கள். அப்படித்தான், அனகாபுத்தூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு முருகேசன் என்னை அழைத்தார். போட்டி ஒன்றில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி என்று என்னிடம் சொன்னார்கள். நானும் போனேன். போனபிறகுதான் தெரிந்தது, தனியாக மேடையெல்லாம் போட்டு பெரிய ஏற்பாடு நடந்திருக்கிறது என்பது. அந்த மேடையில் நான் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நானும் பேசினேன். அதன்பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன்’’ என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.

விஜயபிரபாகரனுக்கு இளைஞரணியில் பதவி வழங்கப்படலாம், அதை விஜயகாந்தே அறிவிப்பார் என்று 2019-ல் பேச்சு எழுந்தது. பின்னர் அது அப்படியே நின்றுபோனது. இன்றைய சூழலில் தே.மு.தி.க-வில் விஜயபிரபாகரனுக்கு எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. தே.மு.தி.க துணைச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷின் தலையீட்டால் விஜயபிரபாகரனுக்குப் பொறுப்பு வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
தொடக்க கால அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு நிறையவே திணறிய விஜயபிரபாகரன், காலம் செல்லச்செல்ல அதிரடியாகப் பேசத் தொடங்கினார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். 2019ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தருமபுரியில் நடந்த தே.மு.தி.க-வின் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில், தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தே.மு.தி.க துணையின்றி ஆட்சிக்கு வராது என்று பேசியிருந்தார். 2019 பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், `தே.மு.தி.க-வுக்கு இரண்டு சதவிகிதம் வாக்குகள்தான் உள்ளது. விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள், ஏன் எங்க வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கீறீர்கள்?’’ என்று பேசினார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது,
கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறோம். தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி இப்போது சிக்கிக்கொண்டார்’ என திருச்சியில் விஜயபிரபாகரன் பேசியிருந்தார். வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டு சர்ச்சையான நிலையில் அவர் இப்படி பேசியிருந்தார். தருமபுரி பொங்கல் விழாவில் விஜயபிரபாகரனின் பேசிய விதம் அ.தி.மு.க தலைமை அதிருப்தியடையச் செய்ததாகவும் அதனாலேயே அக்கட்சிக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்த ராஜ்யசபா சீட்டை ஒதுக்கவில்லை என்றும் அப்போது தகவல் வெளியானது.
இந்தநிலையில்தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக அறிவித்திருக்கிறது. அதன்பிறகு கடலூர் பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், `எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மண்ணைக் கவ்வுவார். எனக்கு ஆணவம் இல்லை. உங்கள் ஆணவத்தைத்தான் மக்கள் அடக்கப் போகிறார்கள். அ.தி.மு.க-வுக்கு இனி இறங்குமுகம்தான். இதுவரைக்கும் விஜயகாந்தைப் பார்த்திருப்பீங்க… பிரேமலதாவைப் பார்த்திருப்பீங்க. இனிமேல் அவங்க ரெண்டுபேரையும் கலந்து விஜயபிரபாகரனை நீங்க பார்ப்பீங்க’’ என்று பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயபிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனாவுடன் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கோவை சிங்காநல்லூரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்பட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டனர்.
Hi there, I apologize for using your form, but I was not sure who to ask for when calling your restaurant, The Awning Company specializes in custom commercial awnings and we have created awnings for the Hollywood Bowl, Dugout at the Padres Stadium, Nick’s and many other well known restaurants in LA, Orange, and San Diego county. If your restaurant is considering redoing your awnings we would love the opportunity to give you a quote, you can reach us online at https://theawningcompanyca.com email at mailto:sales@theawningcompanyca.com or phone at 866-567-8039. Don’t worry I won’t be contacting you a bunch of times, we just wanted to send you a quick note in case it is something your thinking about. Thanks!