ரூ.3 கோடிக்கும் மேலான மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கர்நாடக மாநிலத்தில் கைது செய்திருக்கிறது தனிப்படை போலீஸ்… என்ன நடந்தது?
ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக அளித்த பணத்தைத் திரும்பத் தராமலும் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் உள்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், திடீரென தலைமறைவானார். உரிய சட்ட ஆலோசனைகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும், தலைமறைவாகவில்லை என்றும் அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது.
Also Read:
எட்டு தனிப்படைகள்
இந்தநிலையில், ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்த 8 தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்டக் காவல்துறையினர், தேடி வந்தனர். திருப்பத்தூரில் அவர் இருப்பதாகவும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் முகாமிட்ட தனிப்படை போலீஸார் ராஜேந்திர பாலாஜியைத் தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸும் அளிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த அவர், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருந்த நேரத்தில் தனிப்படையினர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்திருக்கின்றனர்.
19 நாட்களுக்கு மேலாக போலீஸில் சிக்காமல் இருந்த அவரை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரது உறவினர்கள், நண்பர்கள் என 600 பேருக்கும் மேற்பட்டோரின் செல்போன் நம்பர்களைக் கண்காணித்து அவரின் இருப்பிடத்தைப் போலீஸார் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
அடிக்கடி மாறும் கார்கள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் பயணிக்கும் கார்களை அடிக்கடி மாற்றி மாற்றி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாராம். இதனாலேயே அவர் போலீஸில் சிக்காமல் தப்பியதாகவும் சொல்கிறார்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காமல், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஹசன் மாவட்டத்தில் அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து போலீஸார் சுற்றி வளைத்த நிலையில், போலீஸாரைப் பார்த்த உடன் காரில் ஏறி அவர் தப்ப முயன்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் தப்ப முடியாதபடி போலீஸார் சுற்றி வளைத்த நிலையில், வேறு வழியில்லாமல் தப்பும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து விருதுநகருக்கு அவர் இன்று அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.