ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான படம் `மதராஸப்பட்டினம்’. 1940-களில் இருந்த மெட்ராஸ் நகரின் பல இடங்களை டெக்னாலஜி உதவியுடனும் செட் அமைத்தும் அப்படியே நம் கண்முன் தத்ரூபமாகக் கொண்டுவந்திருப்பார்கள். அப்படி மதராஸப்பட்டினம் படத்தில் காட்டப்பட்ட சென்னையின் முக்கியமான ஸ்பாட்டுகளைப் பத்திதான் நாம இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.
ஹீரோயின் என்ட்ரியே மாஸ்தான்!
பழைய காதலன் நினைவுகளோடு சென்னைக்கு முதிய வயதில் வரும் ஹீரோயின் சென்னை ஏர்ப்போர்ட்டில் இறங்கியதும், மதராஸ் நினைவுகளை அசைபோடத் தொடங்குவார். அப்படி அவன் மவுண்ட் ரோட்டில் இப்போதைய ஸ்பென்ஸர் பிளாசாவை கிராஸ் செய்யும்போது, புதிய கட்டடம் ஃபேட் ஆகி பழைய ஸ்பென்ஸர் மால் திரையில் தோன்றுமிடம் மதராஸப்பட்டினம் படத்தின் மேஜிக் மொமண்ட் தொடங்கிவிடும். பழைய ஸ்பென்ஸர் மால் இடிக்கப்பட்டு, ஸ்பென்ஸர் பிளாசா கட்டப்பட்டபோது, பழைய ஸ்ட்ரெச்சரை நினைவுபடுத்தும் வகையில் கிரவுண்ட் ஃப்ளோரில் கட்டுமானம் டிசைன் செய்யப்பட்டது. இனிமேல், ஸ்பென்சர் போன கிரவுண்ட் ஃப்ளோர்ல லிஃப்ட் லாபியைச் சுற்றி அதை நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும்.
ஹீரோயினோடு காரின் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் கொச்சின் ஹனீபா, மவுண்ட் ரோடு…மவுண்ட் ரோடு’னு சொல்லிட்டு வருவார். அதுக்கப்புறம், டாப் ஆங்கிள்ல அன்றைய மவுண்ட் ரோட்டைக் காட்டியிருப்பாங்க. மவுண்ட் ரோடுனாலே ரெண்டு பக்கமும் நிறைஞ்ச கான்க்ரீட் கட்டடங்களும், டிராபிக் ஜாமுமா நமக்கு ரெஜிஸ்டர் ஆகியிருக்க நிலையில, ஆங்காங்கே சில கட்டடங்கள், நிறைய மரங்கள், கொஞ்சமே கொஞ்சூண்டு வாகனங்கள்னு மவுண்ட் ரோட்டை வேறொரு தளத்துல பாக்குறது புது அனுபவம்தான். கவர்னர் மாளிகையில் ஹீரோயின் இறங்கியதும், அவரது லக்கேஜ் பேக்கில்TATA Air Services’ என்ற டேக் ஒட்டியிருப்பதைக் காட்டுவார்கள். சுதந்திரத்துக்கு முன்னரே டாடா சென்னைக்கு விமான சேவைகளை அளித்து வந்தது.
டீடெய்லிங் முக்கியம் குமாரு..!
படத்தின் டைட்டில் கார்டே பழைய மெட்ராஸ் மேப்பைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேப்பில் ஒவ்வொரு இடங்களையும் பாகங்கள் குறிப்பது போன்ற பாணியில்தான் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் காட்டுவார்கள். கதைப்படி, சலவைத் தொழிலாளர்கள் வண்ணாரப்பேட்டை ஏழு தெருவில் குடியிருப்பார்கள். அந்தக் குடியிருப்பைக் காலி செய்துவிட்டு அங்கு கோல்ஃப் கோர்ஸ் கட்ட கவர்னர் ஆணையிடுவார். அதை எதிர்த்துப் போராடுவார்கள் அப்பகுதியில் வசிக்கும் ஹீரோ உள்ளிட்ட மக்கள். இதிலும், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆர்ட் டைரக்டர் செல்வக்குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட படக்குழுவினர் உழைப்பைக் கொட்டியிருப்பார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒலிக்கும் `மேகமே… ஓ.. மேகமே’ பாட்டின் ஒரு வரியில் பக்கிங்ஹாம் கால்வாயையும் மென்ஷன் பண்ணியிருப்பார்கள். அவர்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் சலவைத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்திருப்பதைச் சொல்லியிருப்பார்கள். அதோடு, ஆகாயத்தில் விமானம் பறக்கும்போது,ஏய் குண்டு போடுறாங்க…. குண்டு போடுறாங்க’னு ஒருத்தர் மக்களை அலர்ட் செய்ய, அவர்கள் எல்லாரும் ஓடி ஒளியும் காட்சியும் இரண்டு முறை இடம்பெற்றிருக்கும். இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது மக்களே… முதல் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே இந்திய நகரம் நம்ம மெட்ராஸ்தான். எம்டன் கப்பலில் வந்து குண்டு மழை பொழிந்தார்கள். இதில் மெட்ராஸ் துறைமுகம் உள்பட வடசென்னையின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த ரெஃபரென்ஸைத்தான் மதராஸப்பட்டினம் படத்தில் காட்டியிருப்பார்கள். மேகமே பாட்டில், எம்டன் போட்ட குண்டைப் போல வருவேன் சில நேரம்…’ என்ற ஒரு வரியும் இடம்பெற்றிருக்கும். இரண்டாவது காட்சியில் மக்கள் ஓடி ஒளிவதைப் பார்க்கும் கொச்சின் ஹனீபா,மக்கள் பயணிக்கும் விமானத்தில் இருந்து யாராவது குண்டு போடுவார்களா’ என்று கேட்டு கண்டிப்பார்.
பக்கிங்ஹாம் கால்வாயும் டிராம் வண்டியும்
1800-களின் இறுதி தொடங்கி 1970 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் படகுப் போக்குவரத்து முக்கியமானதாக இருந்தது. ஆந்திராவில் இருந்து விறகு, கரி போன்றவையும் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் போன்றவையும் மெட்ராஸுக்கு வந்திறங்கின. மதராஸப்பட்டினம் படத்தில் படகுப் பயணம் பல முக்கியமான காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும். சென்ட்ரல் ரயில் நிலையப் பின்னணியில் படகுப் பயணக் காட்சிகள் பல இடங்களில் காட்டப்பட்டிருக்கும். அதேபோல், ஹீரோ ஆர்யா – எமி ஜாக்சன் சந்திப்புகளில் படகு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும்.
உலகின் முக்கியமான நகரங்களில் டிராம் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னரே பழைய மெட்ராஸ் மாநகரச் சாலைகளை எலெக்ட்ரிக் டிராம் வண்டிகள் அலங்கரித்தன என்கிறது வரலாறு. ஆரம்ப காலகட்டத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட டிராம் வண்டிகள் பிற்காலத்தில் எலெக்ட்ரிக் ட்ராம் வண்டிகளாக பரிணமித்தன. `என்னடா இது இந்த வண்டி யாருமே இழுக்காமத் தனியா அதுவே போகுது’னு மக்கள் தொடக்கத்தில் எலெக்ட்ரிக் டிராம்களைப் பார்த்து ஜெர்க் ஆனதால், இலவசப் பயணம்னு அறிவிச்ச சம்பவங்களும் நடந்திருக்கு. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் பல வழித்தடங்கள்ல இந்த வண்டிகள் இயக்கப்பட்டன. நஷ்டம் காரணமாக 1953 ஏப்ரல் 11-ம் தேதியோட மதராசப்பட்டினத்தில் டிராம் வண்டியின் பயணம் முடிவுக்கு வந்தது. இப்படி அந்தக் காலத்துல சென்னையின் முக்கியமான அடையாளமா இருந்த டிராம் வண்டி டிராவலும் படத்தின் நிறைய இடங்களில் இடம்பிடித்திருக்கும்.
வாம்மா துரையம்மா…!
இங்கிலாந்தில் இருந்து மெட்ராஸுக்குப் புதிதாக வந்திறங்கியிருக்கும் கவர்னர் மகளான ஹீரோயினுக்கு ஹீரோ சென்னையைச் சுற்றிக்காட்டுவது போல், வாம்மா துரையம்மா’ பாடலின் பின்னணி அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலில் அன்றைய மவுண்ட் ரோடு தொடங்கி மகாபலிபுரம் வரையிலான பல இடங்கள் காட்டப்பட்டிருக்கும். மெரினா பீச்சில் ஹீரோயினை வரவேற்று ஹீரோ,வாம்மா துரையம்மா… இது வங்கக் கரையம்மா.. வரவேற்கும் ஊரம்மா’ என்று பாடத் தொடங்கையில் இன்றைய காமராசர் சாலையில் இரண்டு, மூன்று பெரிய கட்டங்கள் மட்டுமே இருப்பதைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக கட்டடம் உள்ளிட்டவைகள் அந்தக் காட்சியில் இடம்பெற்றிருக்கும்.
மவுண்ட் ரோட்டில் கயிறு கட்டி சாகசம் செய்யும் ஒரு குழுவினரை ஹீரோயின் போட்டோ எடுப்பார். அந்தப் பின்னணியில் அன்றைய மவுண்ட் ரோட்டில் இருந்த எல்பின்ஸ்டோன் தியேட்டரைக் காட்டியிருப்பார்கள். அப்போது பெரும் ஹிட்டடித்த கண்ணம்மா, ஹரிதாஸ், பர்மா ராணி போன்ற படங்களின் தட்டியும் தியேட்டரில் வைக்கப்பட்டிருக்கும். திரையரங்குகளில் படங்கள் பார்ப்பதை அப்போதைய மெட்ராஸ் மக்கள் திருவிழா போல் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். இதனாலேயே, மவுண்ட்ரோட்டைச் சுற்றியிருந்த திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்திருக்கின்றன. மிட்லேண்ட், ஒடியன், பைலட், வெலிங்டன், குளோப் (அலங்கார்), சபையர், கேசினோ, கெய்ட்டி, சில்ட்ரன்ஸ் தியேட்டர்னு வரிசைகட்டி அமைந்திருந்தன. அந்த ஒரு பாட்டில் அன்றைய மெட்ராஸின் பல இடங்களையும் அதன் கலாசாரத்தையும் தனது வரிகளால் நிறைத்திருப்பார் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
எப்போதும் டிராஃபிக் ஜாமால் மூச்சுத் திணறும் பாரி முனைப் பகுதியை ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். 2nd Lane, Beach Road என்ற முகவரியோடு ஒரு ஷாட் தொடங்கும். பாரிமுனையைத் தாண்டு இடதுபுறம் திரும்பி செல்லும் வடசென்னையின் அந்த முக்கிய சாலையில் அந்த டிராம் வண்டிகளும், மாண்டு வண்டிகளும், கார்களும் குதிரை வண்டிகளும் ஒருங்கே செல்வது போன்ற அந்த ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. சென்னையின் முக்கியமான அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையம் மதராசப்பட்டினம் படத்தில், அதிகாலை, மாலை, இரவு என பல காலநிலைகளில் காட்டப்படும் சீன்களை அலங்கரித்திருக்கும்.
அரசுக் கட்டடங்கள்
அன்றைய பிரிட்டீஷ் ஆட்சி நிர்வாகத்துக்காகக் கட்டப்பட்ட பல கட்டடங்களையும் படத்தில் சிறப்பாகவே காட்டியிருப்பார்கள். ஆர்யாவைக் கைது செய்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் கட்டடம் சாட்ஷாத் இன்றைய ராஜாஜி ஹால்தான். கவர்னர் வில்கின்சனின் மாளிகையாக இன்றைய ராஜ்பவனைக் காட்டியிருப்பார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற அறிவிப்பைத் தாங்கிய சுதேசமித்ரன் நாளிதழையும் படத்தின் ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். `ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கு சுதந்திரம், வெள்ளையர்கள் வெளியேற்றம், நேருவுடன் மைக்கேல் ஸ்காட் சம்பாஷணை’ போன்ற தலைப்புச் செய்திகளைத் தாங்கிய சுதேசமித்ரனை ஒரு சிறுவன் கூவிக் கூவி விற்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருக்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற இரவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் சண்டைக் காட்சியில் அந்தக் கட்டடத்தின் உள்கட்டமைப்பு அன்றைய காலத்தில் இருந்தது போலவே மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கும். ரயில்கள் நிற்கும் பகுதி தொடங்கி, பிளாட்ஃபார்ம்கள், ரயில்வே ஊழியர்கள் என்று பலவும் டீடெய்லிங்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அத்தோடு, ஹீரோ ஆர்யாவும் ஹீரோயின் எமியும் பிரிட்டீஷ் போலீஸிடமிருந்து தப்பி ரயில்வே ஸ்டேஷன் கிளாக் டவரில்தான் ஒளிந்துகொண்டிருப்பார்கள். அந்தக் கிளாக் டவரின் உட்புறமும் கிளாச்சிக்கலாகக் காட்டப்பட்டிருக்கும். படத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனோடுதான் படமும் முடிந்திருக்கும்.
மதராசப்பட்டினம் படத்தில் காட்டப்பட்ட கிளாசிக் மெட்ராஸ் லொகேஷன்களில் எந்த இடம் அப்படியே இருந்தா நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க… கமெண்ட்ல சொல்லுங்க..!