இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கும் `தலைவி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் தலைவி படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தைச் சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும், அதையெல்லாம் எதிர்க்கொண்டு படக்குழு ஷூட்டிங் முடித்தது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கான திரைக்கதையை `பாகுபலி’கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பதாக அறிவிக்கப்பட்டபோதே, ஆன் ஸ்க்ரீன் ஜெயலலிதாவாக அவரின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மறுபுறம் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியின் லுக் வரவேற்பைப் பெற்றது.
நடிகை கங்கனாவின் பிறந்தநாளை ஒட்டி டிரெய்லரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. `சூப்பர் ஸ்டார் ஹீரோயின்’ என்ற டேக்குடன் ஜெயலலிதாவாக கங்கனாவை அறிமுகப்படுத்துகிறது டிரெய்லர். நடிப்பு, ஸ்கிரீன் பிரசன்ஸ், நடனம் என ஜெயலலிதா, தனது சினிமா கரியரில் உச்சத்தில் இருந்த நட்சத்திரம். அவரது கேரக்டருக்கு எந்த அளவுக்கு நியாயம் செய்திருக்கிறார் கங்கனா என்று பார்த்தால், திரையில் ஜெயலலிதாவாகவே நிற்கிறார், நடனமாடுகிறார்.
ஆன் ஸ்கிரீனில் எம்.ஜி.ஆருடன் டூயட் பாடியது மட்டுமல்லாமல் அரசியல் வருகைக்குப் பின் அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்ற ஜெயலலிதா எதிர்க்கொண்ட தடைகள் ஏராளம். 3.03 நிமிடங்கள் ஓடும் டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் அத்தனையும் ஷார்ப்பானவை. ஒரு சினிமாக்காரியை வைச்சு எங்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுங்கிறதுங்குறது...’,
இது ஆம்பளைங்க உலகம்… ஆம்பளைங்கதான் ஆளணும்… ஒரு பொம்பள கையில் கட்சியைக் கொடுத்து பின்னாடி நிக்குறோம்…’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்ப்பவை.
அதேபோல், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அரசியலுக்கு அழைப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில், இந்த மக்களுக்கு எதாவது செய்யணும். பொது வாழ்க்கைக்கு வா’ என்று சொல்லும் எம்.ஜி.ஆரிடம்,
இத்தனை பேரை ஆடி சந்தோஷப்படுத்துறது பொது வாழ்க்கை இல்லையா’ என்ற ஜெயலலிதா கேட்கிறார். அதற்கு, `அரசியலுக்கு வா’ என்று எம்.ஜி.ஆர் சொல்கிறார்.
இதேபோல், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடித்த அடிமைப்பெண் ஷூட்டிங் ஸ்பாட், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்த அவமதிப்பு, எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து அவர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம், பாவலர் நெடுஞ்செழியனுடனான ஜெயலலிதாவின் மோதல், நாடாளுமத்தில் பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் ஜெயலலிதா ஆற்றிய உரை என அவர் வாழ்வின் முக்கிய தருணங்கள் டிரெய்லரில் இடம்பெற்றிருக்கின்றன. நெடுஞ்செழியனாக சமுத்திரக் கனியும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக மதுபாலாவும் நடித்திருக்கிறார்கள். டிரெய்லர் முழுவதும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதேபோல், ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
திரை நட்சத்திரமாகவும், அரசியல் தலைவராகவும் ஜெயலலிதா கேரக்டராக கங்கனா கவர்கிறார். சின்னச் சின்ன ரியாக்ஷன்களில் கூட வசீகரம். முழு படத்தில் இன்னும் ஈர்க்கிறாரா எனப் பார்க்கலாம். அதேநேரம், தமிழோ ஆங்கிலமோ ஜெயலலிதாவின் மொழி உச்சரிப்பு பரவலாகக் கவனம் பெற்றது. ஒரே நேரத்தில் பல மொழிகளில் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழில் கங்கனாவின் லிப் சிங்க் சில இடங்களில் சரியாகப் பொருந்தவில்லை என்பது மைனஸாகவே இருக்கும்.
கங்கனா முன்னர் அ.தி.மு.க தலைவர்கள் முதுகை வளைத்து குனிந்து வணக்கம் செலுத்துவது போன்ற காட்சிகள் இந்தி டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்தக் காட்சி தமிழ் டிரெய்லரில் இல்லை.