தமிழகத் தேர்தல் பிரசாரக் களத்தில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் முக்கியவத்துவம் பெற்று வருகிறது. அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 23-ம் தேதி பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர், ஒரு செங்கலை எடுத்துக் காட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கையோடு கொண்டுவந்திருக்கிறேன் என்றார். இது கூட்டத்தில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவர் பேசும்போது, “நான் மதுரையில் பிரசாரத்தை முடித்துவிட்டு இங்கு வருகிறேன். உங்களுக்கு நியாபகம் இருக்கா, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் சேர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவோம்னு 3 வருஷத்துக்கு முன்னால அடிக்கல் நாட்டுனாங்க. அங்க ஒரு செங்கல்தான் இருந்துச்சு. அதை கையோட எடுத்துட்டு வந்துட்டேன். இதோ இதுதான் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை’’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அப்போது வெறும் செங்கலை மட்டுமே காட்டிய உதயநிதி, அடுத்தடுத்த பிரசாரங்களில் எய்ம்ஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த செங்கலை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்தார்.
இதனால், மதுரை எய்ம்ஸ் விவகாரம் தமிழக பிரசாரக் களத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மதுரை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் அவர்கள், மிகப்பிரமாண்ட மருத்துவமனையை மதுரையில் கொண்டு வரப்போறாங்க. அனைத்து வசதிகளும் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை அமையப் போகிறது. பாரதப் பிரதமரே வந்து அடிக்கல் நாட்டிட்டுப் போயிருக்காரு. விரைவாகப் பணிகள் தொடங்கப் போகுது’’ என்று பேசினார்.
அதேபோல், தருமபுரியில் மார்ச் 24-ம் தேதி பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், “ஒரு மெடிக்கல் காலேஜ் வாங்கவே காங்கிரஸ் ஆட்சியில் நாங்க படுறபாடு பெரும்பாடா இருக்கும். இன்றைக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்திருக்கோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் வேலை எதுவும் நடக்கலனு சொன்னாரு. அங்க 200 ஏக்கரு வேலி போட்டாச்சு. காம்பௌண்டு போட்டாச்சு. மேடு, பள்ளங்களை சரிசெய்யும் வேலை நடந்துட்டு இருக்கு. அதற்காக மார்க் பண்ணிருக்காங்க. அதனால இன்னும் ஆறேழு மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் இயங்கும் என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன்’’ என்றார்.
மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது?
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பிரதமர் மோடி 2019ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள், சாலைபோடும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது.
முதலில் ரூ.1,264 கோடியாக இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பட்ஜெட், ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக தென்காசியச் சேர்ந்த பாண்டிராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் பதில் சொன்னது. அதேபோல், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் தலைவராக இருந்த டாக்டர் வி.எம்.கடோச் என்பவரை நியமித்து கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் அரசாணை பிறப்பித்தது மத்திய அரசு.
மேலும், சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியை மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் நியமித்து கடந்த ஜனவரி 7-ல் மத்திய அரசு உத்தரவிட்டது. அதேபோல், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் மற்றும் தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் பொறுப்புக்கு மூன்று பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அந்த ரேஸில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதன்மூலம் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருவதை அறிய முடிகிறது என்றாலும் நிதி ஒதுக்கீடு முழுமை பெறாமல் வேலைகள் சுணக்கமடைந்திருப்பதாகத் தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த பட்ஜெட்டான ரூ.2,000 கோடியில் 85 சதவிகித நிதியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு (JICA) ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 15 சதவிகித நிதியை மத்திய அரசு அளிக்கும். இதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம்.
JICA இணையதளத்தில் எய்ம்ஸ் மதுரை குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்ததாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் நிதி ஒதுக்கீடுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னரே நிதி ஒதுக்கிடு பற்றி முடிவாகும். ஏற்கனவே கடந்தாண்டு டிசம்பரில் 2021 மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது. வரும் 31-ம் தேதிக்குப் பிறகே ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு அதன்பிறகு 45 மாதங்கள் அவருக்குக் கட்டிமுடிக்க கால அவகாசம் கொடுக்கப்படும் என்கிறார்கள்.